நீலகிரியின் வரலாற்றை பறைசாற்றும் தபால்தலை அருங்காட்சியகம்!

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: அஞ்சல்தலையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையிலும் உதகை தலைமை அஞ்சல் நிலையத்தில் தபால்தலை தொகுப்பு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தவும், சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் வகையிலும், கலாச்சாரம்மற்றும் இயற்கையின் அழகிய அம்சங்களைவெளிப்படுத்தும் வகையிலும் அஞ்சல் துறைசார்பில் தபால்தலைகள் வெளியிடப்படுவது வழக்கம். இன்றைய இளைய தலைமுறையினருக்கு அஞ்சல்தலை மற்றும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உதகை தலைமை அஞ்சல் நிலையத்தில் தபால்தலை தொகுப்பு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கு மண்டல அஞ்சல்துறை தலைவர் சுமிதா அயோத்தியா முன்னிலையில், அஞ்சல்துறை தலைவர் சாருகேசி அருங்காட்சியகத்தை தொடங்கி வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில் தாவரங்கள், விலங்குகள், இயற்கைப் பாதுகாப்பு, ரயில்வே வரலாறு, சுதந்திர போராட்ட வீரர்கள், புவிசார்குறியீடு தயாரிப்புகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் 30 தபால்தலை சட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இளம்பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நினைவுப் பொருட்கள், அஞ்சல்தலை பொருட்கள் விற்பனை செய்யும் அஞ்சல்தலை கவுன்ட்டர்கள் மற்றும் ‘மை ஸ்டாம்ப்’ கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக உதகை அஞ்சல் நிலைய போஸ்ட் மாஸ்டர் செந்தில்குமார் கூறும்போது, ‘‘பொழுதுபோக்கு அம்சங்களின் அரசன் என்று கருதப்படும் அளவுக்கு தபால்தலை சேகரிப்பில் பலரும் ஈடுபட்டுள்ளனர். தபால்தலை சேகரிப்பு, தகவல்களின் புதிய பரிணாமத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஒருவரின் அறிவுத்திறனை பெருக்குவதற்கும் மிகவும் சிறந்த வழியாக உள்ளது.

இந்த அருங்காட்சியகம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். பொதுமக்கள் இலவசமாக அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE