விருப்பமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக புதுச்சேரியை மாற்ற மாஸ்டர் பிளான்!

By அ.முன்னடியான்

புதுச்சேரி: நாட்டின் நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலாத் தலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு புதுச்சேரி அரசு மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய அரசு ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில் சேர்த்துள்ளது. அதில் மத்திய சுற்றுலா அமைச்சகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்காக, ப்ரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ், எல்&டி நிறுவனங்களை திட்ட மேம்பாடு மற்றும் மேலாண்மை ஆலோசகராக தேர்வு செய்துள்ளது.

மேலும் இந்த நிறுவனத்தினர் ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் விரிவான திட்ட அறிக்கை மற்றும் சுற்றுலாவுக்கான செயல் திட்டத்தை உருவாக்க அரசின் நிர்வாகத்துக்கு ஆலோசகராகவும் உதவுவர். இது தொடர்பாக புதுச்சேரி சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாஸ்டர் பிளானை பொறுத்தவரையில் 10 ஆண்டுகளில் சுற்றுலாவை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும், நாட்டின் விருப்பமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும். இத்திட்டத்தில் மதிப்பீடு, சட்டப்பூர்வ மற்றும் சுற்றுலாத் திட்டங்களின் மதிப்பாய்வு, இலக்கு வெளியீடுகள், முன்மொழியப்பட்ட உத்திகள், திட்ட செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புத் திட்டம் ஆகியவை அடங்கும்.

மாஸ்டர் பிளான் அடிப்படையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் அதிகபட்சமாக நான்கு முறைகளை தேர்வு செய்து விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும். ஏற்கெனவே புதுச்சேரியில் 50 இடங்களையும், காரைக்காலில் 20 இடங்களையும் பிடிஎம்சி பார்வையிட்டு தொடக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து பிற இடங்களுக்கு விமான இணைப்பை மேம்படுத்துதல், பேருந்து வசதிகள், சுற்றுலா பயண முனையத்தை மேம்படுத்துதல் மற்றும் இ-வாகன சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் இந்த மாஸ்டர் பிளான் கவனம் செலுத்தும்.

புதுச்சேரியில் உள்ள மணப்பட்டு பகுதியில் சுற்றுலா மண்டலங்களை உருவாக்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கான பரிவர்த்தனை ஆலோசகரை சுற்றுலாத் துறை நியமித்துள்ளது. இதுமட்டுமின்றி கடலோர ஒழுங்குமுறை மண்டலம் வரைபடம் தயாரிக்க, நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தை கோரியுள்ளோம். முன்மொழியப்பட்ட திட்டங்கள் இந்த விதிமுறைகளுக்குள் ஏற்கத்தக்கதா என்பதை கண்டறிய இந்த ஆய்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் வரைபடம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் புதுச்சேரி அரசு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள், ஆன்மிக தலங்கள் பிரஷாத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. மத்திய சுற்றுலா அமைச்சகம் இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்காலை அடையாளம் கண்டுள்ளது. பல்வேறு கோயில்களின் வளர்ச்சிக்காகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கான ஆலோசகரை அரசு ஏற்கெனவே இறுதி செய்துள்ளது என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE