உக்கடம் பெரியகுளத்தில் ‘சாகச விளையாட்டு’ - 30 அடி உயரத்தில் கம்பியில் தொங்கியபடி செல்லலாம்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் சாகச விளையாட்டுக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

கோவை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், குளங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, உக்கடம் - செல்வபுரம் புறவழிச் சாலையில் பெரியகுளத்தில் ரூ.62.17 கோடி மதிப்பில் கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டு, பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தினமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், பெரியகுளத்தில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சாகச விளையாட்டுக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘உக்கடம் பெரியகுளத்தில் மேற்குப்பகுதி கரையை ஒட்டிய பகுதியில் ‘ஜிப் லைன் ஹேங்கிங்’ (தொடங்கியபடி செல்தல்), ‘ஜிப் லைன் சைக்கிளிங்’ (தொங்கியபடி சைக்கிளில் செல்தல்) ஆகிய இரு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 30 அடி உயரத்தில் கம்பியில் தொங்கியபடி ஒருமுனையில் இருந்து மறுமுனைக்கு செல்லலாம்.

50 அடி உயரத்தில் சைக்கிளில் மிதித்தபடி செல்லலாம். ஒரே நேரத்தில் 3 பேர் செல்லும் வகையில் தலா 3 இரும்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. உரிய பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தியபடி பயணம் மேற்கொள்வர். ஒரு முனைக்கும் மற்றொரு முனைக்கும் உள்ள தூரம் 200 மீட்டர் ஆகும். இந்த விளையாட்டுகளுக்கான கட்டண விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இதில் பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் 200 கிலோ எடை வரை தாங்கும் திறன் கொண்டவையாகும். தற்போது இந்த சாகச விளையாட்டுகள் சோதனை அடிப்படையில் நடக்கின்றன. அடுத்த வாரத்தில் முறைப்படி தொடங்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE