கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் விரைவில் தொடக்கம்

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்துக்கு விரைவில் ஆணை வழங்கி பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள சிறை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.172.25 கோடி மதிப்பில் செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இயற்கையை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்களுக்கு கல்வி ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றுக்கு பயன்பெறும் வகையிலும் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறந்த பொழுதுபோக்குக்கு பயன்பெறும் வகையிலும் உலகத் தரத்தில் இப்பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், செம்மொழிப் பூங்கா அமைய உள்ள இடத்தில், பணிகள் தொடங்குவதற்கு தேவையான பூர்வாங்க நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் எஸ்.விஜயகுமார், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘இப்பூங்காவில் குறிஞ்சி வனம், செம்மொழி வனம், மர வனம் ஆகியவை அமைகின்றன. பூங்காக்களின் வகை, அதன் தன்மைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மகரந்தப் பூங்கா, நறுமணப் பூங்கா, மூலிகைப் பூங்கா போன்ற 16 வகையான பூங்காக்கள் கலைநுட்பத்துடன் அமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

விசேஷ மண்டபங்கள், உள் அரங்கம், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், விற்பனை அங்காடிகள், ஓய்வறைகள், திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சி செய்யும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

இப்பூங்கா அமைப்பதற்கான நிறுவனம் ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் திட்டத்தை தொடங்குவதற்கான பணி ஆணை வழங்கப்பட உள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE