கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் ஏமாற்றம் தரும் சிறுவர் பூங்கா - ‘ஏற்றம்’ பெறுவது எப்போது?

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் பராமரிப்பின்றி உள்ள அம்மா பசுமை பூங்கா மற்றும் சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள டான்சி வளாகத்தில் நகராட்சி சார்பில் அம்மா பசுமை பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், பெரியவர்களைக் கவரும் வகையில் செயற்கை நீர் ஊற்றுகள், நிழற்கூடம் சோலார் மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பூங்காவை, அப்போது நகராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் தனியார் வசம் ஒப்படைத்தனர். பூங்காவுக்கு உள்ளூர் மக்களும், வெளியூர்களிலிருந்து பல்வேறு பணிக்கு நகருக்கு வரும் கிராமப் பகுதி மக்களும் பொழுதுபோக்குக்கு இங்கு வந்து சென்றனர்.

கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் உள்ள அம்மா பசுமை பூங்காவில் செயல்படாமல்
உள்ள செயற்கை நீரூற்று.

மேலும், முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் பாழாகியுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மக்களுக்கு பொழுதுபோக்குக்கான போதிய இடம் இல்லாததால், நகரின் மையப்பகுதியில் உள்ள இப்பூங்காவுக்குக் கடந்த காலங்களில் பொதுமக்கள் தினசரி மாலை நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தங்கள் குழந்தைகளுடன் வந்து, விளையாடி பொழுதைக் கழித்தனர்.

எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ள நிழற்கூடம்.

தற்போது, பராமரிப்பு இல்லாமல் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. பொதுமக்கள் அமர வசதியாக அமைக்கப்பட்ட நிழற்கூடம் சாய்ந்த நிலையிலும், இரவில் ஒளிரும் வசதியுடன் அமைக்கப்பட்ட செயற்கை நீர் ஊற்றுகள் இயங்காத நிலையிலும் உள்ளன. பூங்காவில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, பாழாகியுள்ள பூங்காவைச் சீரமைத்து புதிய பொலிவுக்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE