யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் புதுச்சேரியை சேர்க்க வரைவு ஆவணம் தயாரிப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியை யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு ஆவணத்தை இன்டாக் நிறுவனம் தயாரித்துள்ளது. இது சம்பந்தமாக புதுச்சேரி மாநில அளவிலான பாரம்பரிய பாதுகாப்புக் குழு யுனெஸ்கோவிடம் விண்ணப்பம் செய்ய முன்மொழிந்துள்ளது.

யுனெஸ்கோ வழிகாட்டுதல்களின்படி இந்த வரைவு ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் இந்த அங்கீகாரம் புதுச்சேரிக்கு கிடைத்தால், புதுச்சேரி சர்வதேச அளவில் பிரபலமாவதோடு, சுற்றுலா மற்றும் நகர்ப்புற சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு சர்வதேச மேம்பாட்டு நிறுவனங்களிடமிருந்து அதிக நிதி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக இன்டாக் புதுச்சேரி பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் அசோக் பாண்டா கூறுகையில், “புதுச்சேரி ஏற்கெனவே இந்த மைல்கற்களை எட்ட மூன்று முக்கிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியின் பாரம்பரிய தலங்கள் மற்றும் பாரம்பரிய வளாகங்களை பாதுகாக்க பாரம்பரிய ஒழுங்குமுறையை அரசு அறிவித்துள்ளது. மாநில அளவிலான பாரம்பரிய பாதுகாப்புக் குழுவையும் அமைத்துள்ளது.

மேலும் 118 தனியார் மற்றும் 13 மத கட்டிடங்களின் இரண்டாவது பட்டியலை, பட்டியலிடப்பட்ட பாரம்பரிய கட்டிடங்களாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதுபற்றி பொதுமக்களின் கருத்துகளை அறிய ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இவற்றில் ராஜ்நிவாஸ், பழைய நீதிமன்ற வளாகம், போலீஸ் தலைமையகம் உள்ளிட்டவை அடங்கும்.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலை பொருத்தவரையில், அவர்கள் கொடுத்துள்ள 10 அம்சங்களில் ஏதேனும் ஒன்றாவது முக்கியமாக இருக்க வேண்டும். புதுச்சேரியை பொருத்தவரையில் பிரெஞ்சு காலனித்துவ கட்டிடங்கள், பாரம்பரிய தமிழ் வீடுகள் போன்ற தனித்துவமான கட்டிடக்கலை சூழலை கொண்டுள்ளன. தமிழ் கட்டிடங்களில் திண்ணை, முற்றம் போன்றவைகள் இருக்கின்றன. பிரெஞ்சு கட்டிடங்களை பொருத்தவரையில் பெரிய கதவுகள், ஜன்னல்கள் வைத்துள்ளனர். ஆகவே பாரம்பரியமாக இருக்கும் இவைகள் தான் நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டியவை.

தற்போது இந்தியாவிலேயே ​​அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் ஆகியவை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள நகரங்கள் ஆகும். அதே நேரத்தில் டெல்லிமற்றும் சாந்திநிகேதன் ஆகியவை தற்காலிக பட்டியலில் உள்ளன. இருப்பினும், புதுச்சேரியில் பல தனித்தன்மைகள் உள்ளன. அவை இந்த நகரங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் வேறுபடுகின்றன.

புதுச்சேரி நகரமைப்பு குழுமம், இன்டாக் நிறுவனத்துடன் இணைந்து பாரம்பரிய மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. விரைவில் பணிகள் முடியும். இதற்கிடையில், உலக பாரம்பரிய நகரமாக பட்டியலிடுவதற்கு யுனெஸ்கோ குழு வருகை தரும் முன் புதுச்சேரி அரசிடம் இன்டாக் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு ஆர்வலர்கள், சில நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, போக்குவரத்து மற்றும் பார்க்கிங் பிரச்சினைகள், செயல்படாமல் உள்ள தெருக்கள், தெருமின் விளக்குகளை சரிசெய்து தீர்வு காண வேண்டும். முக்கியமாக இதனை புல்வார்ட் மற்றும் பாரம்பரிய கட்டிடங்கள் உள்ள பகுதியில் செய்ய வேண்டும். யுனெஸ்கோவின் அங்கீகாரம் புதுச்சேரிக்கு கிடைத்தால், புதுச்சேரி சர்வதேச அளவில் பிரபலமாகும். சுற்றுலா மற்றும் நகர்ப்புற சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு சர்வதேச மேம்பாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதியும் கிடைக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE