கொடைக்கானல் ஏரி தண்ணீரை சுத்தப்படுத்த நவீன ‘ஆக்சிஜன் மீட்டர்கள்’

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரி தண்ணீரை தூய்மைப்படுத்த ஆர்.ஓ வாட்டர் பியூரிஃபையர்கள் போன்று 4 நவீன ஆக்சிஜன் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியை ரூ.24 கோடி செலவில் அழகுப் படுத்தும் பணி நகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி ஏரியைச் சுற்றி 4.5 கி.மீ. தூர நடைபாதை சீரமைக்கப்பட்டு வருகிறது. ஏரியைச் சுற்றி மரத்திலான வேலி போன்று காட்சி தரும் ‘எப்.ஆர்.பி’ எனும் மெட்டீரியல்களால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

ஏரியில் உள்ள செடிகளை அகற்ற பிரத் யேக இயந்திரங்கள் வாங்கப் பட்டுள்ளன. ஏரியின் மேல் 160 அடி தூரத்துக்கு மிதவை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மாசடைந்துள்ள ஏரியை ‘பயோ பிளாக்’ தொழில்நுட்பத்தில் தூய்மைப்படுத்த ஜப்பானில் இருந்து ‘பயோ பிளாக் கற்கள்’ வர வழைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த கட்டமாக, ஆர்.ஓ வாட்டர் பியூரிஃபையர்கள் போன்று செயல்படும் ‘ஆக்சிஜன் மீட்டர்கள்’ ஏரியில் 4 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதிலுள்ள மல்டி பில்டர்கள் ஆக்சிஜனை தண்ணீருக்குள் செலுத்தி நேர்த்தியான முறையில் தண்ணீரை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

இதன் மூலம் ஏரியில் உள்ள தண்ணீர் சுத்தமாவதோடு, மாசடைவது தடுக்கப்படும். தற்போது வெவ்வேறு நிறுவனங் களில் இருந்து வரவழைக்கப் பட்ட ஆக்சிஜன் மீட்டர்கள் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆய்வில் பலன் கிடைத்தால் ஆக்சிஜன் மீட்டர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE