கோவையில் அமையும் செம்மொழிப் பூங்கா - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் அமைந்துள்ள கோவை மத்திய சிறை, கடந்த 1872-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். ஆண்கள் சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பெண்கள் சிறையில் 50-க்கும் மேற்பட்டோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை சரக சிறைத்துறை டிஐஜி மேற்பார்வையில், சிறைக் கண்காணிப்பாளர் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் இங்கு பணியாற்று கின்றனர். கோவை மத்திய சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு, கோவையில் நடைபெற்ற தமிழ் செம்மொழி மாநாட்டின் போது, அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

இதையடுத்து, சிறை வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செம்மொழிப் பூங்காவுக்காக கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒதுக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மீதமுள்ள 120 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் கைதிகளை அடைக்கும் இடம், சிறை தொழிற்கூடங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளன. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது மீண்டும் திமுக அரசு அமைந்ததை தொடர்ந்து, செம்மொழிப் பூங்கா ஏற்படுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சிறையை காரமடை அருகே இடமாற்றம் செய்ய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே வேளையில், தற்போது சிறை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள 45 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் முதல்கட்டமாக செம்மொழிப்பூங்கா பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு என்னென்ன கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என ஆய்வு செய்யப்பட்டு, பல்வேறு துறை வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு, மாநகராட்சியால் விரிவான திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த திட்ட அறிக்கை சில மாதங்களுக்கு முன்னர் நகராட்சிநிர்வாக இயக்குநரகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தகுந்த நிறுவனங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இது குறித்து மாநகராட்சி ஆணையர்மு.பிரதாப் கூறியதாவது: கோவை மத்திய சிறை வளாகத்தில் முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் ரூ.172.21 கோடிமதிப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. 4 கட்டங்களாக திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.தாவரவியல் பூங்கா, பல் நோக்கு மாநாட்டு மையம், அடுக்குமாடி வாகன நிறுத்தகம், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வர குழாய்கள் பதித்தல் ஆகிய 4 பிரிவுகளாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தாவரவியல் பூங்கா முக்கியமானதாக இருக்கும். இதனுடன் மூலிகைப் பூங்கா, இசை கருவிகள்தயாராகும் மரங்கள் பூங்கா ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன. அது தவிர, பழைய வரலாற்று கட்டமைப்புகள், சூரிய ஒளி மின் உற்பத்தி வசதி, சிற்பங்கள் ஆகியவையும் அமைய உள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் சில நிறுவனங்கள் வந்துள்ளன.

அவற்றின் ஒப்பந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து ஒப்பந்த நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு, பணி ஆணை வழங்கப்படும். பின்னர், முதல்வர் இத்திட்டப் பணியை தொடங்கி வைப்பார். பணிகள் தொடங்கப்பட்ட மாதத்தில் இருந்து 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE