இயற்கையும், ஆன்மிகமும் நிறைந்துள்ள ‘திருநல்காசி’

By ஆ.நல்லசிவன்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாட்சி என்று அழைக்கப்படும் விருப்பாட்சப் பட்டணத்தை 13-ம் நூற்றாண்டில் மன்னர் திருமலை ஆண்டு வந்தார். அவருக்கு அசரிரீயாக வந்த உத்தரவின்படி தலையூத்து அருவிக்கு அருகில் அவரது இஷ்ட தெய்வமான சிவனுக்கு ‘விருப்பாட்ச ஈஸ்வரர்’ கோயிலையும், குல தெய்வமான பெருமாளுக்கு ‘நீலமலை அழகர்’ கோயிலையும் அமைத்தார். இக்கோயில்கள் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் மூலிகை வாசம் நிரம்பிய வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது.

கோயில் இருக்கும் பகுதி முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்குச் செல்ல எந்தவித தடையும் இல்லை. மலையடிவாரத்தில் சில கி.மீ. தூரம் கரடு முரடான பாதையில் நடந்து கோயிலை அடையலாம். சிவன் கோயிலுக்குச் செல்லும் வழியில் நீலமலை அழகர் கோயில், சப்த கன்னிகள், ஆஞ்சநேயர், விநாயகரை தரிசிக்கலாம்.

இங்கிருந்து சிறிது தொலைவில் விருப்பாட்ச ஈஸ்வரர் கோயிலை சென்றடையலாம். அங்கு 18-ம் படி கருப்பணசுவாமி, வனதுர்க்கை, பைரவர், நாக விசாலாட்சி அம்மனை தரிசிக்கலாம். இதில் சிவனுக்கு எதிரில் இரண்டு நந்திகள் அமர்ந்த நிலையில் பார்க்க முடியும்.

* திருநல்காசி நதி: இக்கோயிலுக்கு அருகில் திருநல்காசி நதி (தலையூத்து) அமைந்துள்ளது. பரப்பலாறு அணையிலிருந்து வெளியேறும் நீர், விருப்பாட்சி மலை வழியாக தலையூத்து அருவியாகக் கொட்டுகிறது. ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் வற்றாத ஜீவநதி. இந்த நீரை காசி தீர்த்தத்துக்கு இணையாக கருதுவதால் ‘நல்காசி’ எனும் பெயரும் உள்ளது.

பின்னர், மலையடிவாரத்தில் இருந்து பல கி.மீ. தூரத்துக்கு நங்காஞ்சியாறு எனும் பெயரில் ஓடுகிறது. இந்த நதி சகலவிதமான பரிகாரங்களுக்கும் ஏற்றது என்றும், இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவது காசியில் தர்ப்பணம் தருவதற்கு நிகரானது என்றும் நம்பப்படுகிறது. திருநல்காசி நதி நீர் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் நடைபெறும் கோயில் கும்பாபிஷேகத்துக்கும், அபிஷேக ஆராதானைக்கும் புனித நீராக பயன்படுத்தப்படுகிறது.

* மகா சிவராத்தி வழிபாடு: விருப்பாட்ச ஈஸ்வரர் கோயிலில் 13-ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரை நாள்தோறும் ஆறு கால பூஜைகள் நடந்துள்ளன. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் மன்னர் கோபால் நாயக்கர் காலத்தில் ஆங்கிலேயருடன் நடந்த போரில் மேற்கண்ட ஆலயங்கள் சிதிலமடைந்தன.

இருப்பினும், பிரதோசம், அமாவாசை, பவுர்ணமி, திருக்கல்யாண விழாவின்போது உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, மகா சிவராத்திரி விழாவின்போது இரவில் இங்கு வந்து தங்கியிருந்து சிவனை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு வருபவர்களுக்கு புது வித அனுபவத்தையும், ஆச்சர்யங்களை தரும் அற்புதமான ஆன்மிகப் பயணமாக இருக்கும்.

* சுற்றுலா தலமாக்க திட்டம்: இக்கோயிலை விருப்பாட்சி கிராம மக்கள் தங்களால் இயன்ற வகையில் பராமரித்து வருகின்றனர். இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லை. அதனால், பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்லில் இருந்து பழநி செல்லும் வழியில் விருப்பாட்சியில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் மணிமண்டபம் பகுதியிலிருந்து கோயிலுக்கு சில கி.மீ. தொலைவுக்கு நடந்தோ, சொந்த வாகனங்களிலோ செல்ல வேண்டும்.

தற்போது பரப்பலாறு அணை மற்றும் விருப்பாட்சி தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, ரூ.822 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தலையூத்து அருவிக்கும், விருப்பாட்ச ஈஸ்வரர் கோயிலுக்கும் எளிதாகச் சென்று வரலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE