பழநி முருகன் கோயிலில் பக்தர்களிடம் பணம் பறித்து ஏமாற்றும் போலி வழிகாட்டிகள்

By செய்திப்பிரிவு

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களை போலி வழிகாட்டிகள் (கைடுகள்) ஏமாற்றி பணம் பறிப்பதை போலீஸார் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களை பேருந்து நிலையம், அடிவாரம், முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் வழி மறிக்கும் போலி கைடுகள் விரைவாக மலைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகவும், சிறப்பு தரிசனம், அபிஷேகம் மற்றும் பூஜைக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி ரூ.200 முதல் ரூ.5,000 வரை பணம் வசூலிக்கின்றனர்.

அதன் பின்பு அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யாமல் பணத்துடன் சென்று விடுகின்றனர். இது போன்ற போலி கைடு களிடம் சிக்கும் பக்தர்கள் பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. போலி கைடுகள் மூலம் பக்தர்கள் ஏமாறுவதை தடுக்க கோயில் நிர்வாகம் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பக் தர்கள் கூறியதாவது: முதல் முறையாக குடும்பமாக 10-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு பழநிக்கு வந்தோம். நேற்று காலை பெயர் தெரியாத ஒருவர் வந்து முடி காணிக்கை, அபிஷேகம் மற்றும் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி ரூ.5,500-ம், பூஜை பொருட்களுக்கு ரூ.1,500-ம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டார்.

இது குறித்து கோயில் அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்று கூறினர். இது குறித்து கோயில் அதிகாரிகள் கூறுகையில், தரிசனத்துக்கு பக்தர்களை அழைத்துச் செல்வதற்கு என்று கைடுகள் யாரும் கிடையாது. தரிசன நேரம், அர்ச்சனை போன்றவற்றின் கட்டண விவரங்கள் இடம்பெற்ற அறிவிப்பு பலகைகள் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒலிப்பெருக்கி மூலம் போலி கைடுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப் படுகிறது. யாராவது விரைவாக அழைத்து சென்று தரிசனம் செய்ய வைப்பதாக கூறி பணம் கேட்டால் கோயில் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE