நூற்றாண்டை நெருங்கும் கல்லாறு தூரிப்பாலம் - பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

By செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத் தில் உள்ள கல்லாறு என்ற இடத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களை இணைக்கும் பாலமாக கடந்த 1925-ம் ஆண்டு தூரிப்பாலம் கட்டப்பட்டது.

மலையடிவாரப் பகுதியில் கல்லாறு என்ற காட்டாற்றை வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்த தொங்கு பாலம் 65 மீட்டர் நீளமும் 5.5 மீட்டர் அகலமும் கொண்டதாகும். 30 டன்னுக்கு மேல் எடையை தாங்கும் வகையில் இப்பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தின் அடியில் எவ்வித தூண்களையும் அமைக்காமல் ஒட்டுமொத்த பாலமும் தொங்கும் வகையில் கட்டப்பட்டதாகும்.

கட்டப்பட்டு 98 ஆண்டுகளான இப்பாலத்தின் மீது எதிரெதிரே பேருந்து போன்ற இரு கனரக வாகனங்கள் கடக்க இயலாது என்பதால், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு இப்பாலத்தின் அருகே புதிய கான்கிரீட் பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டியது. இதனால் இப்பகுதியை கடக்க புதிதாக கட்டப்பட்ட சிமென்ட் பாலத்தை வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நூற்றாண்டை தொடவுள்ள பழமையான தூரி பாலம் கடும் மழை மற்றும் பனிப் பொழிவு அதிகமுள்ள இடத்தில் இருந்தாலும், இதுவரை இதன் இரும்பு கம்பிகள் துருப்பிடிக்காமலும் வளையாமலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓடந்துறை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பல்வேறு பொறியியல் சிறப்புகளை கொண்ட இந்த தொங்கும் தூரிப் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவித்து பராமரிக்க வேண்டும் என்பது மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் உதவியால் இப்பாலம் புதுப்பிக்கப்பட்டது. இந்தப் பாலத்தை பொதுமக்களின் பார்வைக்காக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE