சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த குற்றாலம் நீச்சல் குளம் பயனற்று கிடக்கும் அவலம்

By செய்திப்பிரிவு

தென்காசி: புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி ஆகிய அருவிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். இவற்றில் செண்பகாதேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான சாரல் சீஸன் காலத்தில் இதமான தென்றல் காற்று வீசும். வானில் தவழ்ந்து வரும் மேகக் கூட்டமும், அடிக்கடி பொழியும் சாரல் மழையும் சுற்றுலாப் பயணிகளைக் குதூகலப்படுத்தும். சீஸன் காலத்தில் குற்றாலத்துக்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டுப் பணிகளை அதிகமாக மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. ஆனால் யானைப்பசிக்கு சோளப்பொறி போல சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்காக குறைவாகவே நிதி ஒதுக்கப்படுகிறது.

புதிதாக சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இருக்கும் வசதிகளை ஒவ்வொன்றாக இழந்து வரும் நிலை காணப்படுகிறது. இதற்கு உதாரணமாக குற்றாலம் நீச்சல் குளம் திகழ்கிறது. குற்றாலம் விஸ்வநாதராவ் பூங்கா எதிரே உள்ள நீச்சல்குளம் கடந்த 2003-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரம் குளிக்க ரூ.25 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் பேரூராட்சிக்கும் வருவாய் கிடைத்தது. மேலும், சாரல் திருவிழா காலங்களிலும் நீச்சல் போட்டி நடத்தி பரிசளிக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த நீச்சல் குளம் பராமரிப்பு இல்லாமல் போனது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நீச்சல் குளம் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

சாரல் விழாக்களில் நீச்சல் போட்டியும் இல்லாமல் போனது. மீண்டும் நீச்சல் குளத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாக உள்ளது.

இது குறித்து குற்றாலம் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதரன் கூறும்போது, “நீச்சல் குளத்தை சீரமைக்க வேண்டும் என்றால் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவாகும். இதற்கு பேரூராட்சியில் போதுமான நிதி வசதி இல்லை. நமக்கு நாமே திட்டத்தில் சீரமைப்பு பணிகள் செய்ய சிலரிடம் பேசி வருகிறோம். ஆனால் மக்கள் பங்களிப்பு நிதி கிடைக்கவில்லை. எனவே நிதி வசதியை கேட்டுப் பெற்று, நீச்சல் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE