கோவை | டாப்சிலிப்பில் மீண்டும் யானை சவாரி - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

By எஸ்.கோபு


பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த உலாந்தி வனச்சரகத்தில் அமைந்துள்ள டாப்சிலிப், தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இங்கு நிலவும் குளிரான காலநிலை, உயரமான மரங்களை தழுவிச் செல்லும் மேகக்கூட்டங்கள், இலைகளின் மேல் பரவிக் கிடக்கும் பனிப் படலம், அதனை ஊடுருவி வரும் சூரியனின் ஒளிக்கற்றைகளின் வெப்பத்தால், விழித்தெழும் பறவைகளின் ரீங்கார ஒலி என இயற்கையின் பேரழகை கண்டு ரசிக்க, தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

வளர்ப்பு இங்குள்ள யானைகள் முகாமில், 26 யானைகள் வனத்துறையால் பராமரிக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகளை வனப்பகுதிக்குள் நடைபயணம், கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு சூழல் சுற்றுலாவுக்கு வனத்துறையினர் அழைத்துச் செல்கின்றனர். கோழிகமுத்தி யானைகள் முகாமை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு வளர்க்கப்படும் யானைகளுக்கு காலை, மாலை நேரங்களில் உணவு வழங்குவதை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் யானை சவாரி செல்வதை விரும்புவர். இதற்காக கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாமிலுள்ள நன்கு பயிற்சி பெற்ற யானைகளை கொண்டு சவாரி நடத்தப்பட்டது. இந்நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு யானை சவாரி நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி இல்லாததால், 3 ஆண்டுகளாக யானை சவாரி நடைபெறாமல் உள்ளது. இதனால் டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். மேலும், யானை சவாரி நடந்த இடம் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச் சோடி காணப்படுகிறது.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, "டாப்சிலிப் பகுதிக்கு சுற்றுலா வந்தால், இங்குள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு, வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் அழைத்துச் செல்கின்றனர். செல்லும் வழியில் மான், யானை உள்ளிட்ட விலங்குகளை பார்க்க முடிகிறது. இருப்பினும், வனப்பகுதிக்குள் யானையில் சவாரி செல்வது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.

டாப்சிலிப் என்றால் யானை சவாரி செல்லலாம் என்ற ஆசையில்தான் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இல்லாததால், டாப்சிலிப்பில் மீண்டும் யானை சவாரி நடத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "முகாமில் உள்ள பயிற்சி பெற்ற கும்கி யானைகளை கொண்டு டாப்சிலிப்பில் குறிப்பிட்ட தூரம் வனப் பகுதிக்குள் சென்று வரும் வகையில் யானை சவாரி நடத்தப்பட்டது. இதற்காக 60 வயதுக்கு கீழ் உள்ள கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டன. கரோனா பரவல் காரணமாக யானை சவாரி நடத்த தடை விதிக்கப்பட்டது.

அதன் பிறகு யானை சவாரியை மீண்டும் நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை. அனுமதி கிடைத்த பிறகு மீண்டும் யானை சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE