ரூ.9 கோடி மதிப்பில் திட்டம்: மேம்படுத்தப்படுமா கிருஷ்ணகிரி அணை சிறுவர் பூங்கா?

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை சிறுவர் பூங்கா 36 ஏக்கரில் பரந்து விரிந்திருந்தும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றம் அடையச் செய்கிறது. சிறிய ‘தீம் பார்க்’, மோட்டார் படகு உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்குப் பொழுதுபோக்குக்கு ஏற்ற இடங்கள் இல்லை. விடுமுறை நாட்களில் கிருஷ்ணகிரி அணையில் உள்ள சிறுவர் பூங்காவை தவிர வேறு குறிபிட்டு சொல்லும் இடமில்லை. ஆனால், இங்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல் இருப்பது சுற்றுலா ஆர்வலர்களைக் கவலை அடையச் செய்துள்ளது.

சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் உள்ள கிருஷ்ணகிரி அணை சிறுவர் பூங்காவில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், சிறுவர்களுடன் அணைக்கு வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.

இதுதொடர்பாக சுற்றுலாப் பயணிகள் சிலர் கூறியதாவது: கிருஷ்ணகிரி அணைக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலிருந்தும் ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர் பகுதிகளிலிருந்தும், கர்நாடக மாநிலம் பெங்களூரு, கேஜிஎப் உள்ளிட்ட இடங்களிலிருந்தும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

நீர்வளத் துறையினரின் கணக்கீட்டின்படி, சராசரியாக மாதம்தோறும் கிருஷ்ணகிரி அணைக்கு 40 ஆயிரம் பேரும், கோடை விடுமுறையான மே மாதத்தில் 70 ஆயிரம் பேரும் வந்து செல்கின்றனர்.

ஆனால், பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் எந்த கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் இருப்பது பெரும் குறையாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவர் பூங்கா ரூ.5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே, பயணிகளை மகிழ்விக்கும் வகையில், பூங்காவில் சிறிய, ‘தீம் பார்க்’, மீன் காட்சியகம், மோட்டார் படகு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீர்வளத்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது: சிறுவர் பூங்காவில் அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், சுற்றுச் சுவர், மின்னொளி நீரூற்றுகள், தரைப்பாலத்தில் இரும்பு கைபிடி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள சுமார் ரூ.9 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல அணையில் மோட்டார் படகு இல்லம் அமைக்க ரூ.5 கோடிக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பூங்காவை மேம்படுத்த சுற்றுலாத் துறையில் நிதி கேட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE