பூட்டியே கிடக்கும் மதுரை புதுமண்டபம்: சிற்பங்களை காண முடியாமல் ஏமாற்றம்

By செய்திப்பிரிவு

மதுரை: பழங்கால சிற்பங்களை மறைத்து கடைகள் வைத்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளால் சிற்பங்களை காண முடியவில்லை எனக் கூறி, மதுரை புதுமண்டபத்திலிருந்த கடைகள் காலி செய்யப்பட்டன. ஆனால் அதன் பின்னர் ஓராண்டைக் கடந்தும் மண்டபத்தை பூட்டியே வைத்துள்ளது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள புது மண்டபம், மன்னர் திருமலை நாயக்கரால் 1635-ல் கட்டப்பட்டது. அக்காலத்தில் சிறந்து விளங்கிய சிற்பிகளைக் கொண்டு இம் மண்டபத்தில் கலைநயமிக்க சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மதுரைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புது மண்டபத்தை சுற்றிப் பார்க்க தவறுவதில்லை.

இந்த மண்டபத்தில் உள்ள 28 வகையான சிற்பங்களின் நுட்பமான கலைநயம் காண் போரை வியக்க வைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்புதுமண்டபத்தில் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் 240 கடைகளை வாடகைக்கு விட்டிருந்தது.

பாரம்பரிய திருவிழா ஆடை கள் தைக்கும் கடைகள், பூஜைப் பொருட்கள், கலை நயமிக்க பொருட்கள், புத்தக கடைகள், பாத்திரக் கடைகள் போன்றவை இங்கு இருந்தன. அதனால், ‘பண்டைய காலத்து மால்’ போல் இந்த புதுமண்டபம் செயல்பட்டது.

சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களில் வியாபார பொருட்களை தொங்கவிட்டு சிற்பங்களை சேதப்படுத்துவதாகவும், இதனால் அவற்றை பராமரிக்க முடியாமலும் உள்ளதாகக் கூறி, அங்குள்ள கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.

புதுமண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பித்து மீண்டும் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக திறக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் கடைகள் காலி செய்யப்பட்டு ஓராண் டுக்கு மேலாகியும் தற்போது வரை புது மண்டபம் திறக்கப்படவில்லை. உற்சவ விழாக்களுக்காக மட்டும் அவ்வப்போது திறக்கப்படுகிறது.

இதுகுறித்து “இந்து தமிழ் திசை” உங்கள் குரலில் தொடர்புகொண்ட சங்கீதா என்பவர் கூறியதாவது, புதுமண்டபத்தில் உள்ள கடைகளால் கலைநயமிக்க சிற்பங்கள் சேதமடைவதாகவும், அதனை சுற்றுலாப் பயணிகள் முழுமையாக பார்த்து ரசிக்க முடியவில்லை என்றும் கூறி வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் தற்போது வரை புதுமண்டபம் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படவும் இல்லை, புதுப்பிப்பு பணிகளும் நடக் கவில்லை.

அங்கு கடைகள் செயல்பட்ட போதாவது, அனைத்து நாட்களிலும் காலை முதல் இரவு வரை புதுமண்டபத்துக்குள் சென்று சிற்பங்களையும், பிரம்மாண்ட தூண்களையும் பார்க்க முடிந்தது. ஆனால் தற்போது மண்டபத்தை மீட்பதாகக் கூறி மொத்தமாக மூடிவிட்டனர். இந்து அறநிலையத் துறை யின் இந்த நடவடிக்கை எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, புதுமண்டபத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக கடைகள் செயல்பட்டு வந்துள்ளன. இதனால் இம்மண்டபத்தின் ஸ்திரத்தன்மை குறித்து விரிவாக ஆய்வு செய்து, அதன் பின்னரே சீரமைப்புப் பணிகள் குறித்து திட்டமிட வேண்டியுள்ளது. அதனால் தற்சமயம் திருவிழாக் காலங்களில் சுவாமி உற்சவத்துக்காக மட்டும் திறக்கப்படுகிறது, என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE