‘‘மார்ச் 1 என்னுடைய பிறந்தநாளன்று ஆடம்பரம் சிறிதும் இன்றி மக்களுக்கு பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள்’’ என்று திமுகதொண்டர்களுக்கு முதல்வர்ஸ்டாலி்ன அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் இமாலய வெற்றியை அளித்து நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர். வெற்றி பெற்றவர்களை நேரில்சந்திக்க வேண்டும் என்ற எண்ணமும் விருப்பமும் எனக்கு அதிகமாக இருந்தது. அறிவாலயத்தில் அவர்களின் ஆர்வம் கண்டு மகிழ்ந்தேன்.
இந்த வெற்றி, மாபெரும் வெற்றி. தொடர்ந்து 6 தேர்தல் களங்களில் அடுத்தடுத்து வெற்றியை பெற்றுள்ளது திமுக தலைமை யிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி. இந்த வெற்றியின் அருமை பெருமை முழுவதும் மக்களையே சேரும். இதற்காக அல்லும் பகலும் உழைத்த அனைவருக்கும் நன்றி.
வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2-ம் நாள் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலையில், மார்ச் 4-ல்மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. அந்தப் பொறுப்புகளுக்கு கட்சியின் சார்பில் அறிவிக்கப்படுபவர்களை முழுமையான அளவில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதுபோலவே, கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்படும் இடங்களில் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் கட்டுக்கோப்புடன் செயல்படுவதுதான் கட்சியினரிடம் நான் எதிர்பார்க்கும் பரிசு.
மார்ச் 1-ல் என்னுடைய பிறந்தநாள். என் பிறந்தநாளையொட்டி, நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது. மக்களுக்கு பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். அறிவுப் புரட்சிக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள். வருங்கால தலைமுறைக்கு நம் லட்சியங்களை எடுத்துரைக்கும் வகையில் புதிய உறுப்பினர்களைச் சேருங்கள். திராவிட மாடல் அரசின் 9 மாதகால சாதனைகளை விரிவாக எடுத்துரையுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago