யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கேள்வித்தாள்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் மதுரை எம்பி சு.வெங்கடேசன் மனு அளித்துள்ளார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உட்பட 25 பதவிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. இத்தேர்வு முறையில் பாரபட்சம் நிலவுகிறது. முதல்நிலை மற்றும் பிரதான தேர்வுகளின் கேள்வித்தாள்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் உள்ளன. இதனால், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத் தேர்வர்கள் ஆங்கிலத்தில் உள்ள கேள்விகளை தங்களின் தாய்மொழியில் உள்வாங்கி புரிந்து கொண்டு பதிலளிக்கின்றனர். இதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதன் காரணமாக இந்தி பேசாத மாநிலங்களின் தேர்வர்கள் தேர்ச்சிபெறும் விகிதம் குறைந்து வருகிறது. தேசிய அளவில் தமிழ்நாடு கல்வியில் முன்னேறிய மாநிலமாக உள்ளது. எனினும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
ரயில்வே பணி நியமனம் உள்ளிட்ட சில அகில இந்திய தேர்வுகளில் அந்தந்த மாநில மொழிகளில் கேள்வித்தாள்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல், யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளிலும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளில் கேள்வித்தாள்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago