குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு - முதல்வர், மத்திய இணையமைச்சர், தலைவர்கள் இரங்கல் :

By செய்திப்பிரிவு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன்: குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. ஏற்கெனவே, வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருண் சிங்கை நேரில் சென்று பார்த்து, அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்துவிட்டார் என்ற துன்பச் செய்தி கேட்டு பெரிதும் வருத்தமுற்றேன். அவரது தீரமும், கடமை உணர்வும் அனைவருக்கும் ஊக்கமாக அமைவதுடன், என்றும் அவர் நம் நினைவுகளில் நிலைத்து வாழ்வார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன்: குரூப் கேப்டன் வருண்சிங் உயிரிழந்தது மிகவும் மன வருத்தம் அளிக்கிறது. குடும்பத்துக்கு ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: கேப்டன் வருண் சிங் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். அவருக்கு எனது அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: கேப்டன் வருண்சிங் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: சௌர்ய சக்ரா விருது பெற்ற கேப்டன் வருண் சிங் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், விமானப்படையினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

இதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, உள்ளிட்டோரும் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்