அடிக்கடி கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை : சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் விமர்சனம்

By செய்திப்பிரிவு

அடிக்கடி கூட்டணி மாறுவது பாமக-வின் வாடிக்கை என சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக சேலம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி மீதும், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையை ஏவி சோதனை நடத்தி வருகிறது. இதற்கு முழுக்கமுழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்.

அதிமுக-வை நேரடியாக எதிர்க்க முடியாமல், திமுக குறுக்கு வழியில் அதிகாரத்தை பயன்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில், அதனை மறைக்க லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனை செய்து வருகின்றனர். இந்தியாவில் ஊழலால் கலைக்கப்பட்ட அரசு திமுக அரசுதான். ஊழல் ஆட்சியை திமுக செய்து வருகிறது.

எங்கள் கூட்டணியில் இருந்தபோது துரோகம் செய்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அப்படி என்ன துரோகம் செய்துவிட்டோம் என அவர்கள் தான் விளக்க வேண்டும். கூட்டணி அமைத்து தொகுதிகள் கொடுத்து, அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தினார்கள்.

அந்த வேட்பாளருக்கு நீங்களும், நானும் மட்டும் ஓட்டு போட்டால் போதாது. மக்கள் ஒட்டு போட்டால்தான் வெற்றி பெற முடியும்.

பாமக அடிக்கடி கூட்டணி மாறுவது, அவர்களின் வாடிக்கைகளில் ஒன்று. உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதால், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

விலைவாசி உயர்வைக் கண்டித்து நாளை (17-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்