நைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவர் மூலம் அவரது குடும்பத்தினர் 6 பேருக்கு கரோனா தொற்று வேகமாக பரவியுள்ளது. அதனால், 7 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பாக இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு செய்யப்படும் கரோனா பரிசோதனை மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உருமாறிய ஒமைக்ரான் கரோனா தொற்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் இதுவரை 41 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் ஒரு வாரத்துக்கு மேலாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதிக பாதிப்பு உள்ள 12 நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று இல்லாவிட்டால், வீடுகளில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதிக பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்து, தொற்று இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை, அதிகபாதிப்பு உள்ள நாடுகளில் இருந்துவந்த 11,480 பேருக்கும், பாதிப்புஇல்லாத நாடுகளில் இருந்து வந்த58,745 பேரில் 1,690 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 37 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது மாதிரிகள் பெங்களூருவில் உள்ள இன்ஸ்டம் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதில், பரிசோதனை முடிவுகள் வந்த 4 பேருக்கு டெல்டா வகைகரோனா இருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களது பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. அந்த 33 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், பாதிப்பு இல்லாத நைஜீரியாவில் இருந்து கடந்த10-ம் தேதி சென்னை வந்த ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினர் 6 பேருக்கும் தொற்று இருந்தது. ஒருவரிடம் இருந்து குடும்பத்தினர் 6 பேருக்கும் தொற்று வேகமாகபரவியதால் ஒமைக்ரானாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.
ஓரிரு நாளில் தெரியும்
7 பேரும் சென்னை கிண்டிஅரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது மாதிரிகள் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் ஓரிரு நாளில் வந்த பிறகே, அது ஒமைக்ரான் பாதிப்பா என்பது தெரியும்.கேரளாவில் இருந்து தமிழகம்வரும் 13 எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா எல்லைகளிலும் சாலை மார்க்கமாக வருபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago