அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்தும், இந்த நிர்வாகிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி அதை உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இத்தேர்தலை எதிர்த்து ஓசூரைசேர்ந்த அதிமுக தொண்டரான ஜெயச்சந்திரன் என்பவர் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
அதிமுக உள்கட்சி தேர்தல், கட்சி விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படவில்லை. 21 நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. குறுகிய இடைவெளியில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதால் 1.50 கோடி தொண்டர்கள் வாக்களிக்க போதுமான அவகாசம் அளிக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படவில்லை.
தடை விதிக்க வேண்டும்
உள்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றஉள்நோக்கத்துடன் இந்த தேர்தல்நடத்தப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் இத்தேர்தல் நடைபெறவில்லை. எனவே, இத்தேர்தலுக்குதடை விதிக்க வேண்டும். அதுபோல, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே டிச.7-ம் தேதி, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் நடந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்துள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.
தேர்தல் ஆணையத்துக்கு..
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.மேலும், உள்கட்சி தேர்தல் தொடர்பான விவகாரத்தில் தலையிட்டு, அதை கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் அறிவுறுத்த முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago