கல்குவாரிகள் மூலம் வரும் வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்துக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அதிமுக அரசில் கல்குவாரி நடத்தஅனுமதி பெற்றவர்கள், மாதம்தோறும் பருவநிலைக்கு ஏற்ப மாதத்துக்கு இத்தனை யூனிட் ஜல்லி உற்பத்தி செய்கிறோம் என பர்மிட் கோரி விண்ணப்பித்தனர். உதவி இயக்குநர்களும் அதற்கேற்ப 15 நாட்களுக்கு ஒரு முறையோ, மாதம் ஒருமுறையோ பர்மிட் வழங்கி வந்தனர். இதனால் சந்தையில் கட்டுமான தேவைக்கேற்ப ஜல்லி கிடைப்பதில் சிக்கலின்றி, விலையும் நிலையாக இருந்து வந்தது.
திமுக ஆட்சியில் கடந்த 2 மாதங்களாக கல்குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பர்மிட் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 12 ஆயிரம் யூனிட் ஜல்லி உற்பத்தி செய்யப்படும் என்று கூறி அனுமதி பெற்றவர்கள், மாதத்துக்கு 1,000 யூனிட் வீதம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற புதிய விதியை தமிழக அரசு தங்கள் மீது திணிப்பதாக கல்குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும், 15 நாட்கள் அல்லதுமாதத்துக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த பர்மிட், தற்போது 3 நாட்களுக்குஒருமுறை என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் ஜல்லி உற்பத்தியாளர் சங்கம் தெரிவிக்கிறது.
ஆனால், 50 சதவீதத்துக்குமேல் காலாவதியான கல்குவாரிகள், எந்தவிதமான பர்மிட்டும் பெறாமல், ஆளுங்கட்சியினரை கவனித்துவிட்டு ஜல்லிவியாபாரத்தில் கொடிகட்டி பறப்பதாகவும் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதனால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் முழுவதும் எங்கே போகிறதுஎன்று மக்களுக்கு விளக்க வேண்டியது இல்லை. கரூர், புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் போன்ற சில மாவட்டங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் நடப்பதாக கூறப்படுகிறது.
எனவே, பர்மிட் வழங்கும் நடைமுறையை 15 நாட்கள் அல்லது மாதம் ஒருமுறை என மாற்ற வேண்டும். காலாவதியான குவாரிகளை செயல்பட அனுமதிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்குவாரி வருவாய் முழுவதும் அரசுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago