யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் :

By செய்திப்பிரிவு

பாஜக ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை 5 நாட்களில் ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.

மதுரை கோ. புதூரைச் சேர்ந்தவர் மாரிதாஸ். இவர் முப்படைகளின் தலைமை தளபதி மரணம் தொடர்பாக மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டதாக அவர் மீது மதுரை சைபர் கிரைம் போலீஸில் கடந்த டிச.9-ம் தேதி திமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்தார்.

இதன்பேரில் மாரிதாஸை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மாரிதாஸ் மனு தாக்கல் செய்தார். அவரது மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு கடந்த 2 நாட்களாக விசாரிக்கப்பட்டது.

நேற்று நடந்த விசாரணையின்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் வாதிடுகையில், முப்படைகளின் தளபதி மரணம் தொடர்பாக தேவையற்ற கருத்தை மாரிதாஸ் பதிவிட்டுள்ளார். தமிழக அரசுக்கு எதிராகவும், மாநிலத்தின் அமைதியை குலைக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் விதமாகவும் அவரது பதிவு அமைந்துள்ளது என்றார்.

மாரிதாஸின் வழக்கறிஞர் அனந்தபத்மநாபன் வாதிடுகையில், மாரிதாஸ் தமிழக அரசை விமர்சித்து வருகிறார். அவரை அமைதியாக இருக்க வைக்கவே கைது செய்துள்ளனர் என்றார். புகார்தாரரின் வழக்கறிஞர் புகழ்காந்தி, வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஊடகங்களுக்கான கருத்து சுதந்திரம் தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 (1) (ஏ)-ல் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் யூ டியூபர்களுக்கும், பொதுமக்கள் பிரச்சினையில் கருத்து தெரிவிப்பவர்களுக்கும் பொருந்தும்.

பின் விளைவுகளை யோசிக்காமல் கருத்து தெரிவிப்பவர்கள், பின்விளைவுகளை யோசித்த பிறகு எழுதுபவர்கள் என இருவிதமான நாவலாசிரியர்கள் இருப்பதாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற துருக்கி நாவலாசிரியர் ஒர்கான் பாமுக் கூறியுள்ளார்.

எனது பார்வையில் மனுதாரர் மாரிதாஸ் முதல் பட்டியலில் வரும் நபராக தெரிகிறார். முதலில் கருத்தை பதிவிட்டு விட்டு, பின்னர் அந்த பதிவை நீக்கியுள்ளார்.

எனவே, மனுதாரர் மீது இந்திய தண்டனை சட்டம் 505 (1) மற்றும் (2), 124 (ஏ), 504, 153 (ஏ) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தது செல்லாது. அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் மாரிதாஸ் இருப்பதால் மேற்கூறிய வழக்கு ரத்தாகியும் அவர் விடுதலையாக முடியாத நிலை உள்ளது.

‘காவல்துறைக்கு இழுக்கு’

இதுகுறித்து பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி கூறியது: பொய் வழக்குப் போட்டு, பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு, விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் ஜனநாயக விரோதமாக செயல்பட்ட திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். இதேபோல் பல பொய் வழக்குகளைத் தொடர்ந்து பாஜகவினர் பலரை பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்தி கொள்ள வேண்டும். மேலும், தேச விரோத கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்களையும், பிரதமர் குறித்து அவதூறான பதிவுகளை செய்பவர்களையும் கைது செய்ய தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும். இத்தீர்ப்பானது, தமிழக காவல் துறைக்கு இழுக்கு என்பதை உணர்ந்து இனி இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்