தொற்றா நோய் பரிசோதனை, ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் - தமிழக அரசுக்கு 2 விருதுகளை வழங்கி கவுரவித்தது மத்திய அரசு :

தொற்றா நோய்களுக்கான பரிசோதனை, ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் தமிழக அரசுக்கு விருது வழங்கிமத்திய அரசு கவுரவித்துள்ளது.

இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில், ‘ஆஸாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெருவிழா இந்திய அரசால் கடந்த நவ.16-ம் தேதி முதல் டிச.12 வரை கொண்டாடப்பட்டது. இந்த பெருவிழாவில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ளஅனைத்து நலவாழ்வு மையங்களிலும் நடத்தப்படும் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்கான அமர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இலக்குகள் வரையறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் ‘சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டது.

இந்திய அளவில் 29,88,110 தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை செய்து முதல் இடத்தையும், 85,514 ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்கான அமர்வுகளை நடத்தி மூன்றாம் இடத்தையும் பெற்று தமிழக அரசு 2 விருதுகளை வென்றுள்ளது.

டெல்லியில் அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தினத்துக்கான கொண்டாட்ட நிகழ்வில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விருதுகளை வழங்கினார். தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது,பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

அச்சனக்கல் சுகாதார நிலையம்

தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் இந்த நிகழ்வில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வட்டாரத்துக்கு உட்பட்ட அச்சனக்கல் துணை சுகாதார நிலையத்தில் களப் பணியாளர்களின் அணி மிக சிறப்பாக பணியாற்றியதன் அடிப்படையில் அச்சனக்கல் துணை சுகாதார நிலையத்துக்கு மிக சிறந்த துணை சுகாதார நலவாழ்வு மையத்துக்கான விருது வழங்கப்பட்டது.

சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவின் கீழ் தமிழகம் பெற்ற இந்த சாதனைக்கு, மக்களைத் தேடிமருத்துவம் திட்டம் பெரும் பங்காற்றியுள்ளது. அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் நோக்கத்தை அடைவதற்கு, மக்களைத் தேடி மருத்துவம், மக்கள் நல பதிவு ஆகிய திட்டங்கள் சிறந்த முறையில் வழி வகுக்கும் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE