மதுரையில் கம்யூனிஸ்ட் இயக்க எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கண்ட முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவின் சகோதரருமான எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன்(81) மதுரையில் நேற்று முன்தினம் இரவு நரிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார்.
கோவில்பட்டியில் 1942-ம் ஆண்டு செப்டம்பரில் எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் பிறந்தார். மதுரையில் பத்தாம் வகுப்பு வரை படித்த அவர் 1958-59-ல் நியூ செஞ்சுரி ஹவுஸ் புத்தக நிலைய விற்பனையாளராக சேர்ந்தார். 1960-ல் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி நாளிதழான ‘ஜனசக்தி'யில் உதவி செய்தியாளராக தனது பத்திரிகைப் பணியைத் தொடங்கினார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 'ஜனசக்தி'யின் முதல் நூலகர் ஆர்.நல்லகண்ணு (1946); கடைசி நூலகர் என்.ராமகிருஷ்ணன் (1962-64).
1964 ஏப்ரலில் மார்க்சிஸ்ட் கட்சிஉதயமான பின்பு 1965-66-ல் ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தார். விடுதலைக்குப் பின்பு தீக்கதிர்நாளிதழில் உதவி ஆசிரியரானார். 1966-ல் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனார். புதுடெல்லியில் 1969 முதல் 1983 வரை மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற அலுவலகக் குழுவில் பணியாற்றினார்.
பின்னர் என்.ராமகிருஷ்ணன் தன் முழு கவனத்தையும் எழுத்துத்துறையில் நாட்டம் செலுத்தினார். மொத்தம் 76 நூல்களை எழுதி உள்ளார். ஆங்கிலத்திலும் 10 புத்தகங்களை எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் இருந்து 25 புத்தகங்களை தமிழாக்கம் செய்துள்ளார். பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி உள்ளார்.
மறைந்த என்.ராமகிருஷ்ணனின் மனைவி குருவம்மாள் மறைவுக்குபின்பு, மதுரை தீக்கதிர் அலுவலகத்திலேயே தங்கி எழுத்துப் பணியாற்றி வந்தார். அவருக்கு மகள் சித்ரா, மகன் மணவாளன் உள்ளனர்.
இந்நிலையில், மறைந்த எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணனின் உடல் தீக்கதிர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
என்.ராமகிருஷ்ணன் மறைவுக்கு தலைவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் என்.ஆர். எனப் பொதுவுடைமை இயக்கத்தினரால் அன்புடன் அழைக்கப்பெற்றவர். அவ்வியக்கத்தின் வரலாற்றையும் கடைக்கோடிக்கும் கொண்டு சேர்க்கும் பணியைத் தன் வாழ்நாள் கடமையாகவே மேற்கொண்ட எழுத்தாளராக விளங்கிய அவரது மறைவு மார்க்சிய அறிவுலகுக்குப் பேரிழப்பாகும்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தனது வாழ்நாள் முழுவதையும் கட்சிக்காகவும், புரட்சிகர எழுத்துக்காகவும் அர்ப்பணித்த என்.ராமகிருஷ்ணனின் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
இதேபோன்று, தி.க. தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago