எட்டயபுரம் பாரதி இல்லத்துக்கு ஆளுநர் வருகை : சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

By செய்திப்பிரிவு

எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவி லட்சுமியுடன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவரை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வரவேற்றார்.

தொடர்ந்து அவர், கார் மூலம் எட்டயபுரத்தில் உள்ளமகாகவி பாரதியார் இல்லத்துக்குச் சென்று, அங்குள்ள பாரதியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பாரதி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதியாரின் புகைப்படங்களை பார்வையிட்டார்.

அங்கிருந்து, பாரதியார் மணிமண்டபத்துக்கு வந்த ஆளுநரை, எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து பள்ளி மாணவ - மாணவிகள் பாரதியார் வேடமணிந்து, கைகளில் தேசிய கொடியேந்தி வரவேற்றனர். ஆளுநர், ‘ரொம்ப சந்தோஷம்’ எனக்கூறி மாணவ - மாணவிகளைப் பாராட்டினார்.

தொடர்ந்து, மணிமண்டபத்தில் உள்ள பாரதியாரின் முழு உருவச்சிலைக்கு ஆளுநர் தனது மனைவியுடன் மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்து காரில் தூத்துக்குடி சென்றார்.

தூத்துக்குடி அரசினர் விருந்தினர் மாளிகையில் வைத்து, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். முன்னாள் ராணுவத்தினரையும் சந்தித்து பேசினார்.

மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்குச் சென்ற ஆளுநர், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை, துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன், துணைத் தலைவர் பீமல் குமார் ஜா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர், தனது மனைவியுடன் ஆளுநர் இழுவைக் கப்பலில் பயணித்து துறைமுகத்தை பார்வையிட்டார். துறைமுகத்தில் உள்ள தளங்கள், வசதிகள், வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மாலை 6 மணிக்கு திருச்செந்தூர் சென்ற ஆளுநர் நேற்றிரவு அங்கு தங்கினார். இன்று (டிச.14) காலை 6 மணி முதல் 7 மணி வரை திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு செல்கிறார். நாளை (15-ம் தேதி) திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்