குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தின்போது உதவியவர்கள் கடவுளுக்கு சமம் என நஞ்சப்பசத்திரம் கிராம மக்களிடம், தென்மண்டல ராணுவ அதிகாரி உருக்கமாக பேசினார்.
நீலகிரி மாவட்டம், குன்னூரை அடுத்த நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான பகுதியை, ராணுவத்தின் தென்மண்டல அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண் நேற்று ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களுக்கு, ராணுவம் சார்பில், உணவுப் பொருட்கள், கம்பளிகள், பரிசுகளை வழங்கினார். பின்னர், நஞ்சப்பசத்திரம் மக்களுக்கு நன்றி தெரிவித்து லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண் பேசியதாவது:
நான் உங்களது கிராமத்துக்கு நன்றி கூற வந்துள்ளேன். நான் ஒரு வருடம் இங்குள்ள கல்லூரியில் படித்துள்ளேன். ஆனால், உங்கள் கிராமத்துக்கு வரவில்லை. கடந்த 8-ம் தேதி நடந்த விபத்துக்கு உள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 14 பேர் இருந்தனர். விபத்துக்குப் பின்னர், நீங்கள் செய்த உதவியால், அந்த 14 பேரை வெளியே எடுத்தோம். நீங்கள் உதவி செய்திருக்காவிட்டால், 14 பேரையும் ஹெலிகாப்டரில் இருந்து எடுத்து இருக்க முடியாது. ஏதாவது விபத்து நடந்தவுடன், உதவி செய்பவர்கள்தான், அந்த நேரத்தில் கடவுள். பயங்கரமான விபத்து நடந்தது. கீழே விழுந்து சத்தம் ஏற்பட்டது. தீப்பிடித்தது.
அந்த சமயத்தில், நீங்கள் உங்கள் வீட்டில் இருந்த பெட்ஷீட், துணி, கம்பளி, வாளியின் மூலம் தண்ணீர், மருந்துகள் போன்றவற்றை எடுத்து வந்து உதவி செய்தீர்கள். உலகில் தேடினாலும், இந்த மாதிரி உதவி கிடைக்காது. இந்த மாதிரியான கிராமமும் கிடைக்காது. இதற்காக நான் நன்றி கூறுகிறேன்.
நம் நாட்டில் இதுபோன்ற கிராமங்கள் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய உந்துகோலாக உள்ளது. உங்களைப் போன்றவர்கள் உள்ளதால்தான், எங்களைப் போன்று நிறைய பேர், இந்த உடையணிந்து, தேசத்துக்காக போராட வருகின்றனர்.நீங்கள் செய்த உதவி யாராலும்செய்ய முடியாதது. சிறப்பானது. தீயணைப்புத் துறை, காவல்துறை செய்த சேவையையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில், மாவட்ட ஆட்சியர், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், வருவாய்த் துறையினர், வனதுறையினர் உள்ளிட்ட எல்லாரும் வந்தனர். அனைவருக்கும் நன்றி. அவர்களை விட முக்கியமானவர்கள் நீங்கள். அதனால், உங்களிடம் பேசி நன்றி கூற வந்துள்ளோம். எங்களுக்கு ஒரு நன்றி மட்டும் சொல்லிவிட்டு போகலாம் என நீங்கள் கூறுவீர்கள். நீங்கள் அளித்ததற்கு சரிசமமாக நாங்கள் திருப்பித் தர முடியாது. நீங்கள் அளித்ததற்கு மதிப்பே கிடையாது. அதனால், நான் என்ன கொடுத்தாலும் அது குறைவாகத்தான் இருக்கும். அதனால், ராணுவம் சார்பில், சிறிய பரிசாக எல்லோரது குடும்பத்துக்கும் பரிசு தருகிறோம். நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.
மேலும், தற்போது முதல் அடுத்து வரும் டிச.8-ம் தேதி வரை, ஒவ்வொரு மாதமும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் ஆகியோரை ராணுவ மருத்துவமனையில் இருந்து உங்களது கிராமத்துக்கு மருத்துவ பரிசோதனை நடத்த அனுப்புகிறேன்.மருத்துவம் தொடர்பான ஆலோசனைகளை ராணுவ மருத்துவமனையில் ஒரு வருடத்துக்கு பெற்றுக் கொள்ளலாம். சிறந்த மருத்துவ நிபுணர் மூலம் இந்தஆலோசனைகள் வழங்கப்படும். உங்களுக்கு நாங்கள் என்ன செய்யவேண்டுமோ கூறுங்கள். உங்களதுஉதவியால் ஒரு விமானப்படைவீரர் மருத்துவமனையில் உயிரோடுஉள்ளார். ஒரு உயிரை பாதுகாப்பதற்கு மதிப்பே கிடையாது. அன்றைய தினம் அந்த 14 பேருக்கும், நீங்கள்தான் கடவுள்போல் இருந்தீர்கள். நன்றி என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago