குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டவுடன் - மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்ட தமிழக அரசு : தென்மண்டல ராணுவ அதிகாரி பாராட்டு

By செய்திப்பிரிவு

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தின்போது, மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், மக்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி வெலிங்டன் ராணுவ முகாமில் நடந்தது.

தென்மண்டல ராணுவ அதிகாரி லெப்டிெனன்ட் ஜெனரல் ஏ.அருண், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

குன்னூர் வெலிங்டனில் கடந்த 8-ம் தேதி எதிர்பாராமல் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது. விபத்து நிகழ்ந்ததற்குப் பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர், சிறப்பு அதிவிரைவுப் படையினர், வருவாய்த் துறை அதிகாரிகள், மருத்துவத் துறையினர், தீயணைப்புத் துறையினர், மின்சார வாரியத்தினர், குன்னூர் வியாபாரிகள் சங்கத்தினர், மிகவும் முக்கியமாக விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் என அனைவரும் உயிரையும் பொருட்படுத்தாமல் துரிதகதியில் மீட்புப் பணிகளில்ஈடுபட்டனர். தமிழக அரசின் துரிதநடவடிக்கையால் மீட்பு பணிகளில்எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க முடிந்தது. இதற்காக அனைவருக்கும் நன்றி சொல்லவே நான் இங்கு வந்துஉள்ளேன்.

அந்த கிராம மக்களே முதலில் விபத்து குறித்து தகவல் தெரிவித்ததுடன், முதலில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள். அக்கிராம மக்கள் தீயை அணைக்க முற்பட்டுள்ளனர். உயிர்களை மீட்க போராடியுள்ளனர். இத்தகைய தருணத்தில் ஒன்றிணைந்து பணி செய்பவர்கள் பதிவு செய்யப்பட வேண்டியவர்கள். எனவே எனது பணி மற்றும் கடமையாக கருதி அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

தமிழக அரசு தொடங்கி அனைத்து துறையினரும் இதில் உதவி செய்து உள்ளனர். உதவி செய்யாதவர்களே இல்லை. இவர்களைப் போன்ற பொதுமக்கள் இருந்தால் நாங்கள் ஒருமுறை இல்லை, 5 முறை ராணுவ உடைஅணிந்து நாட்டுக்காக தியாகம் செய்ய தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் லெப். ஜெனரல் ஏ.அருண் கூறும்போது, ‘இது ஒரு மிகவும் கடினமான சூழல். இதுபோன்ற விபத்துகளுக்கென முன்கூட்டியே நாம் தனியாக திட்டமிடுவது இல்லை. ஊடகங்கள் இவ்விவகாரத்தின் முக்கியத்துவம் மற்றும் இதில் உள்ள சிக்கல்களை மிகச்சரியாக உணர்ந்து உரிய முதிர்ச்சித் தன்மையுடன் செயல்பட்டுள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலையை உணர்ந்து ஊடகங்கள் செயல்பட்டு உள்ளன. இதற்காக ராணுவத்தினர் கடமைப்பட்டவர்களாக உள்ளோம்' என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித், வெலிங்டன் ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங், உதகை மருத்துவக் கல்லூரி டீன் மனோகரி, ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர்.

முதல்வருக்கு நன்றி கடிதம்

மேலும், ஹெலிகாப்டர் விபத்துநிகழ்ந்த சூழலில் மிகவும் உறுதுணையாக இருந்ததற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து லெப்டினன்ட் ஜெனரல் அருண் கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், வெலிங்டன் ராணுவ மையத்தின் தலைவர் ராஜேஸ்வர் சிங் மற்றும் ராணுவ வீரர்கள், வனத்துறையினரின் செயல்களை பாராட்டியதுடன், அவர்களுக்கு தென்மண்டல ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண், தென் பிராந்தியத்தின் சின்னம் பொருத்திய பதக்கம் மற்றும் ரொக்கம் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்