ரங்கம் கோயிலில் ஜாகீர் உசேனை தடுத்த விவகாரம் - ரங்கராஜ நரசிம்மன் மீது போலீஸில் புகார் :

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் பரதநாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேனை தடுத்து வெளியேற்றிய விவகாரத்தில் அத்துமீறி செயல்பட்டதாக ரங்கராஜ நரசிம்மன் மீது கோயில் நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, மாநகர காவல் ஆணையருக்கு நேற்று முன்தினம் அனுப்பியுள்ள புகாரின் விவரம்:

சென்னையைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன், டிச.10-ல் ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்தபோது, தனது மத அடையாளத்தைக் கூறி, கொச்சைப்படுத்தி கோயிலை விட்டு வெளியேற்றி, அவமானப்படுத்தியதாக ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் மீது மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜாகீர் உசேன் மற்றும் கோயில் ஊழியர்களிடம் விசாரித்து புகார் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரங்கராஜன் நரசிம்மன், பலமுறை கோயில் நிர்வாகத்துக்கு எதிராக வேண்டுமென்றே குழப்பம் விளைவித்து, கோயில் நிர்வாகத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை கூறி வருகிறார். இதுதொடர்பாக அவர் மீது கோயில் நிர்வாகம் சார்பில் 21 புகார்கள் அளிக்கப்பட்டதில், இதுவரை 4 புகார்கள் மீது மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ரங்கராஜ நரசிம்மன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

ஜாகீர் உசேனை கோயிலை விட்டு வெளியேற்றிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடங்கிய சிடியும் அந்த புகார் மனுவில் இணைத்து அளிக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE