விட்டமின்2 டி குறைப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
லண்டனில் இருந்து வெளி வரும் நேச்சர் (Nature) அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாட்டு மக்கள் விட்டமின் டி குறைபாட்டால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 49 கோடி பேர் விட்டமின் டி குறைபாடு கொண்டிருக்கிறார்கள். இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதத்துக்கும் கூடுதலானவர்கள் கடுமையான விட்டமின்டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அந்த அறிவியல் இதழ் கூறியுள்ளது.
விளையாட வாய்ப்பு இல்லை
மேலும், மக்கள்தொகையில் 76 சதவீதத்தினர் விட்டமின் டி குறைபாடு கொண்டவர்கள். குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவது குறைந்துவிட்டது தான் குறைபாட்டுக்கு காரணம். பள்ளிக்கூடங்களில், இப்போது மதிப்பெண்களே முதன்மையானதாக மாறிவிட்டதால் விளையாட்டை பள்ளி நிர்வாகங்களும் அனுமதிப்பதில்லை. பெற்றோர்களும் விரும்பவில்லை.மற்றவர்கள் பெரும்பாலும் வெளியில் நடமாடுவதைக் குறைத்துக் கொண்டது தான் இந்நிலைக்கு காரணம் ஆகும். கிரீம்களை தடவிக்கொள்வதால் சூரிய ஒளி முகத்தில் படுவதில்லை; அதனால் விட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.
விட்டமின் டி குறைபாடு ஏற்படுவதை தடுப்பதற்காக சிறப்புத் திட்டத்தை உருவாக்கி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதன் ஒரு கட்டமாக பள்ளிகளில் வாரத்துக்கு 5 பாடவேளைகள் விளையாட்டு கட்டாயமாக்க வேண்டும். மாலை வெயிலில் மக்கள் நடைபயிற்சி செய்வதற்கு ஏற்றவகையில் பூங்காக்களும், விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில்திடல்களும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மத்திய, மாநிலஅரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago