தமிழக செய்தித் துறையில் 6 மண்டலங்களில் உள்ள மாவட்டங்களை ஒருங்கிணைத்து, விளம்பரம், செய்தி வெளியீடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இணை இயக்குநர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக செய்தித் துறை செயலர் மகேசன்காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
செய்தித் துறையின் கட்டுப்பாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் உள்ள மக்கள் தொடர்பு அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசின் முக்கிய அலுவலர்கள், நாட்டின் முக்கிய தலைவர்கள் வரும்போது, அதற்கான ஏற்பாடுகள் செய்தல், விளம்பரம், செய்தியாளர்கள் அழைப்பு, செய்திகளை நாளிதழ்களில் வெளியிடச் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.
மேலும், அரசின் திட்டங்கள், திட்ட பயன்பாடுகளை செய்திகளாக வெளியிடுதல், அரசின் நலத் திட்ட செய்திகள் திரையரங்குகளில் முறையாக ஒளிபரப்பப்படுகிறதா என்பதை கண்காணித்தல், விளம்பரம் தொடர்பான பணிகளை கவனித்தல், அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
இப்பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 மண்டலங்களில் அவற்றை சுற்றியுள்ள மாவட்டங்களை ஒருங்கிணைத்து, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இருந்து அயல்பணியில் (வேறு துறைகளில் மக்கள் தொடர்பு அதிகாரியாக) பணியாற்றும் இணை இயக்குநர்களுக்கு கூடுதல் பணி வழங்க செய்தித் துறை இயக்குநர் அரசுக்கு பரிந்துரைத்தார்.
இதை ஏற்று, கூடுதல் இயக்குநர்களுக்கு பணி வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு சென்னை டிஜிபி அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியான த.சரவணனும், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டலத்துக்கு, சென்னை வனத் துறைஅலுவலகத்தில் உள்ள த.மருதப்பிள்ளையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை உள்ளடக்கிய கோவை மண்டலத்துக்கு சேலம் மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரியான டி.எஸ்.சுப்பிரமணியமும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மண்டலத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் எல்.கிரிராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்துக்கு சென்னை போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அலுவலர் சி.பழனியப்பனும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்கள் அடங்கிய திருநெல்வேலி மண்டலத்துக்கு நாகர்கோவில் அரசுபோக்குவரத்து கழக மக்கள்தொடர்பு அலுவலர் இரா.அண்ணாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago