அரசு கணினி சான்றிதழ் தேர்வைவிரைவில் நடத்த சட்டப்பூர்வநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஜி.லட்சுமி பிரியா தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில்ஆண்டுதோறும் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகளும், அரசு கணினிசான்றிதழ் தேர்வும் நடத்தப்படுகின்றன. கரோனா சூழல் காரணமாக 2020-ம் ஆண்டு தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், தொழில்நுட்பத் தேர்வுகள் மட்டும் கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் நவ.29-ம் தேதி வெளியிடப்பட்டன.
ஆன்லைனில் விண்ணப்பம்
இதேபோல, அரசு கணினி சான்றிதழ் தேர்வையும் நடத்த உத்தேசிக்கப்பட்டு, அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏப்.12 முதல் மே 10-ம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதற்கிடையே, இத்தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடரப்பட்டு தேர்வு நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. வழக்கு காரணமாக கணினி சான்றிதழ் தேர்வை நடத்துவதில் கடந்த 7 மாதமாக சிக்கல் இருந்து வந்தது.
இந்நிலையில், இடைக்கால தடையை நீக்குவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஜி.லட்சுமி பிரியாவிடம் கேட்டபோது, ‘‘கணினி சான்றிதழ் தேர்வு தொடர்பான வழக்கில் இடைக்காலத் தடையை நீக்கசட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தடை ஆணை நீக்கப்பட்டதும் உடனே அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.
தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை (பிப்ரவரி, ஆகஸ்ட்) நடத்தப்படுவதுபோல, அரசு கணினி சான்றிதழ் தேர்வையும் இந்த தேர்வுகளுடன் சேர்த்து நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. ‘கோவா’ எனப்படும் இத்தேர்வை எழுத குறைந்தபட்ச தகுதியாக எஸ்எஸ்எல்சி தேர்ச்சியும், தொழில்நுட்பத் தகுதியாக தட்டச்சு இளநிலை தேர்வுதேர்ச்சியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-4தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கும், சுற்றுலா அலுவலர், உதவிசுற்றுலா அலுவலர் தேர்வுகளுக்கும் அரசு கணினி சான்றிதழ் தேர்வுதேர்ச்சி கட்டாயமாகும்.
தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிக்கு இத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் விண்ணப்பிக்க முடியும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் தகுதிகாண் பருவம் முடிவதற்குள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும்.ஆனால், உதவி சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலர் தேர்வுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அதேநேரம், மத்திய அரசின் கணினி தேர்வு தேர்ச்சி பெற்றிருந்தாலோ, பட்டப் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்தாலோ கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago