அமைச்சர் சி.வெ.கணேசன் மனைவி மரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி இரங்கல்

By செய்திப்பிரிவு

விருத்தாசலத்தில் வசித்து வந்த அமைச்சர் சி.வெ.கணேசனின் மனைவி பவானி நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவரது மனைவி பவானி (54) சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை வீட்டில் இருந்த பெண் பணியாளரிடம் தேநீர் கேட்டுள்ளார். அவர் தேநீர் எடுத்து வருவதற்குள் படுக்கையில் மயங்கிவிட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அலுவல் பணி காரணமாக சென்னையில் இருந்த அமைச்சர் சி.வெ.கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கிருந்து விருத்தாசலம் வந்து மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுதார். சட்டப்பேரவைத் தலைவர்அப்பாவு, துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முத்துசாமி, மா.சுப்பிரமணியன், கயல்விழி, உள்ளிட்டோர் பவானியின் உடலுக்கு மரியாதை செலுத்தி, அமைச்சர் கணேசனுக்கு ஆறுதல் கூறினர்.

அமைச்சர் கணேசனின் மனைவி பவானியின் இறுதிச் சடங்கு இன்றுகாலை 11 மணியளவில் வேப்பூரைஅடுத்த கழுதூரில் உள்ள வெங்கடேஸ்வரா கல்லூரி வளாகத்துக்கு அருகில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் இரங்கல்

அமைச்சர் சி.வெ.கணேசனின் மனைவி பவானி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி:

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனின் துணைவியார் பவானி அம்மாள் மறைந்தசெய்தி அறிந்து துயரத்துக்கு உள்ளானேன். அவரது மறைவுக்கு என்ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தனது ஒவ்வொருதுளி முன்னேற்றத்திலும் பங்கேற்றிருந்த வாழ்க்கை துணைவியாரைஇழந்துவாடும் அமைச்சர் கணேசன் மற்றும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘அமைச்சர் கணேசனின் துணைவியார் பவானியின் திடீர்மறைவு அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்தஇரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்