குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் உயிரிழந்தது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: விபத்து செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பிபின் ராவத் 43 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் நாட்டுக்காக உழைத்தவர். அவரது பாதுகாப்பு உத்திகள், அறிவாற்றல் ஆகியவை அண்மைக்காலங்களில் வெளிப்புற ஆக்கிரமிப்புகளை சமாளிக்க இந்தியாவுக்கு உதவின. அவர் நமது 3 பாதுகாப்புப் படைகளையும் ஒருங்கிணைத்து,உள்நாட்டிலும், வெளியிலும் உள்ளசவால்களை எதிர்கொள்ள அவர்களைபலப்படுத்தினார். அவரது மறைவுஇந்தியாவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
தெலங்கானா ஆளுரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசைசவுந்தரராஜன்: தலைமுறை தலைமுறையாக இந்திய ராணுவப் பணியில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பிபின் ராவத் தமிழ் மண்ணில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது. அவரது இழப்பு இந்திய ராணுவத்துக்கும், நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணவ வீரர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அவர்களது மறைவு நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி: பிபின் ராவத்அஞ்சா நெஞ்சமும், அளவில்லா வீரமும் கொண்ட தேச பக்தர் என்று அனைவராலும் போற்றப்படுபவர். அவருடன் பயணித்த ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தேசத்தின் பாதுகாப்புக்காக தங்களை அர்ப்பணித்து பணியாற்றியவர்கள். அவர்களது மரணம் தேசத்துக்குப் பேரிழப்பாகும். உயிரிழந்தோர் அனைவருக்கும் அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: தேசத்தின் நலனுக்காக வாழ்ந்து, உயிரிழந்தவர்களின் ஆன்மாசாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: நாட்டின் பாதுகாப்பில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு, உயர் பொறுப்புக்கு வந்த முப்படை தளபதி உள்ளிட்டோர் பலியானது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இந்திய ராணுவம் இத்தகைய இழப்புகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: தமிழகத்தில் நேரிட்ட துரதிர்ஷ்டவசமான விபத்து ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. நமது ராணுவத்தின் தளபதியாக, முப்படை தலைமைத் தளபதியாக மிகத் திறம்பட செயலாற்றியவர் பிபின் ராவத். அவரது துயர மரணம் நம் நாட்டுக்கு பேரிழப்பு.
இதேபோல, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago