கும்பகோணம் துவரங்குறிச்சியில் - முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் :

By செய்திப்பிரிவு

முன்னாள் அதிமுக அமைச்சரும், தமிழக முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான எஸ்.ஆர்.ராதாவின் முதலாம் ஆண்டு நினைவு புகழஞ்சலி கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது.

கும்பகோணம் துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஆர்.ராதா(86). எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது வீட்டு வசதித் துறை அமைச்சராகவும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். அரசியல் களத்தில் எளிமையாகவும், கொள்கைப் பிடிப்போடும் வாழ்ந்தவர். திராவிடக் கொள்கையை இறுதிக்காலம் வரை கடைபிடித்தவர்.

உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு டிச.8-ம் தேதி எஸ்.ஆர்.ராதா சென்னையில் காலமானார். அவரது விருப்பப்படி அவரது உடல்தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது.

இதையடுத்து, எஸ்.ஆர்.ராதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் புகழஞ்சலி கூட்டம், கும்பகோணம் துவரங்குறிச்சியில் உள்ளதிருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் சு.கல்யாணசுந்தரம், முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள் சுப.தமிழழகன், ரத்னாசேகர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அனந்தராமன், அதிமுக நிர்வாகிகள் பி.எஸ்.சேகர், க.அறிவழகன், அழகு.த.சின்னையன், என்ஆர்விஎஸ்.செந்தில், கே.ஜெ.லெனின், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் குடந்தை தமிழினி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பங்கேற்று எஸ்.ஆர்.ராதாஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர்.

மேலும் நிகழ்ச்சின்போது, எஸ்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து மாணவ -மாணவிகளுக்கு எழுது பொருட்கள், அன்னதானம் வழங்கப்பட்டன. எஸ்.ஆர்.ராதாவின் குடும்பத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்