கரூர் அருகே ரூ.1 கோடி கேட்டு மிரட்டி கல் குவாரி அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கல்குவாரி ஊழியர் உள்ளிட்ட 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மங்களப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன்(65). இவருக்குச் சொந்தமான கல்குவாரி கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள கூனம்பட்டியில் உள்ளது. இந்நிலையில், கடந்த 6-ம் தேதி இரவு குவாரியில் தங்கியிருந்த சாமிநாதனை, சிலர் அங்கிருந்த டிப்பர் லாரியில் கடத்திச் சென்று ரூ.1 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து சாமிநாதன், தனது மைத்துனர் செல்லமுத்துவை செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை சிலர் கடத்திஉள்ளதாகவும் ரூ.1 கோடி கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்னிலை போலீஸில் சாமிநாதனின் மனைவி நேற்று முன்தினம் புகார் அளித்தார். சாமிநாதனின் செல்போன் சிக்னலைக் கொண்டு போலீஸார் ஆய்வு செய்ததில், சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதனிடையே, சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சி அரசு மறுவாழ்வு இல்லம் அருகே தலைவாசல் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற டிப்பர் லாரிக்கு அருகில் சென்றனர். அப்போது, அங்கு நின்ற இருவர் தப்பியோடினர். போலீஸார் இருவரையும் விரட்டிப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் திருப்பூர் மாவட்டம், ஆலம்பாளையம் முத்தூரைச் சேர்ந்த கோபால் மகன் நவீன்(21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் விஜய்(25) என்பது தெரியவந்தது. லாரியை சோதனையிட்டபோது, ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் சாமிநாதன் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
தென்னிலை போலீஸார் அங்கு சென்று சாமிநாதன் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாமிநாதன் கல்குவாரியில் விஜய் கடந்த பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago