திமுக ஆட்சியில் பெண்கள், பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட இயலவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே, சமூகவிரோத சக்திகளின் அட்டகாசம்,அரசு அதிகாரிகள் சமூக விரோதிகளால், திமுகவினரால் மிரட்டப்படுவது தொடர்கதையாகியுள்ளது. ஜெயலலிதா ஆட்சி, அதைத்தொடர்ந்து அதிமுக ஆட்சியிலும் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டது. அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்பட்டது.
மதுரையில் சினிமா பார்த்துவிட்டு உறவினர்களுடன் வந்த இளம்பெண்ணை மிரட்டி அழைத்துச் சென்ற காவலர், பாலியல் பலாத்காரம் செய்ததுடன், பணத்தையும் பறித்துச் சென்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, கல்பாக்கம் காவல்நிலையத்தில் பணியாற்றும் கவிதா என்ற பெண் காவலர் தன்னுடன் பணியாற்றும் காவலர்கள் தரக்குறைவாக திட்டுவதாகவும் மனதளவில் மிரட்டுவதாகவும் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் பயனில்லை என்றும் கூறி தற்கொலைக்கு முயன்றவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்து சென்ற ராணுவ வீரரை திருடர்கள் வழிமறித்து கைப்பேசி மற்றும் ரூ.ஆயிரத்தை பறித்த சம்பவம், அருகில் இருந்தவர்கள் அவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக செய்தி வந்துள்ளது. தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற சம்பவம் காவல்துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விழுப்புரம் அரகண்டநல்லூரில் பெட்டிக்கடை வைத்துள்ள உலகநாதனை, காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்ததாக, தாக்கப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் இறந்துள்ளார். இதில் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய குடும்பத்தார், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதுதவிர ராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகில் உள்ள நீர்க்கோழிஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தமணிகண்டன் என்ற கல்லூரி மாணவர், போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், வீட்டில் மர்மமான முறையில்இறந்துவிட்டதால், பொதுமக்கள், உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மரணத்தில் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டுகூறப்படுவதால், இவ்வழக்குகளைசிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும் என திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இந்த ஆட்சியில் பெண்கள், பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட இயலவில்லை. ஆட்சியாளர்கள் சமூக விரோதிகள், காவல்துறையில் உள்ள சிலருக்கு ஆதரவாகவும், ஒரு சிலரை பழி வாங்கியும் ஆட்சியை நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. சட்டம் -ஒழுங்கு சீர்குலைவதை பொறுப்புள்ள எதிர்க்கட்சியான நாங்கள்வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இதே நிலை தமிழகத்தில் தொடர்ந்தால் மக்கள் வீதியில் வந்து போராடும் நிலை உருவாகும். நேர்மையான அதிகாரிகளுக்கு சரியான பணியிடங்களை வழங்குங்கள். சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துங்கள், தவறு செய்தகாவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago