மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கதிரியக்கவியல் துறை உதவிப் பேராசிரியர் சக்கரவர்த்தி. இவர், நவ.27-ம் தேதிஒரு பெண் நோயாளிக்கு கர்ப்பப்பையில் கட்டிகள் இருப்பதாகக் கூறி அடி வயிற்றில் ஸ்கேன் பார்த்தார். அப்போது சக்கரவர்த்தி பாலியல் தொந்தரவு செய்ததாக அந்தப் பெண் ஸ்கேன் மையத்தைவிட்டு வெளியே ஓடியதாக தெரிகிறது.
பிறகு அந்த பெண் டீன் ரெத்தினவேலுவிடம் புகார் தந்தார். அந்த புகாரின்படி, டீன் தலைமையிலான குழுவினர் கடந்த 3-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், புகாருக்கு உள்ளான உதவிப் பேராசிரியர் சக்கரவர்த்தியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பெண்ணை, சக்கரவர்த்தி பாலியல் தொந்தரவு செய்ததை விசாரணைக் குழு உறுதி செய்ததோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவக் கல்வி இயக்குநருக்கு விசாரணை அறிக்கையை அனுப்பி வைத்தது. இந்நிலையில், உதவிப் பேராசிரியர் சக்கரவர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, முதற்கட்ட விசாரணையை அடிப்படையாகக் கொண்டு சக்கரவர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவக் கல்வி இயக்குநர் விசாரணையிலும் புகார் நிரூப்பிக்கப்பட்டால் 6 மாதம் அல்லது ஓராண்டு பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago