திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரில் நேற்று காலை 3 மணி நேரத்தில் 27 செமீ மழை பெய்ததால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும், இந்த மழையால் அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திருச்சியிலும் குடியிருப்புகளை மழைநீர்சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்துஉள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் பெய்துவந்த தொடர் மழை கடந்த 2 நாட்களாக இல்லை. இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்குத் தொடங்கி 9 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்படி, மணப்பாறையில் 3 மணி நேரத்தில் 27 செ.மீ மழை பதிவானது.
இந்த மழையால் காட்டு முனியப்பன் கோயில் தெப்பக்குளம் நிரம்பியதாலும், ராஜீவ் நகர் பகுதியில் உள்ள அப்பையர் குளத்தில் ஏற்கெனவே அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் சரிந்ததாலும், அவற்றிலிருந்து வெளியேறிய மழை நீர், காந்திநகர், கரிக்கான்குளம் குடியிருப்பு, அரசுப் பணியாளர்கள் அடுக்குமாடி, முனியப்பன் நகர், மஸ்தான் தெரு வண்டிப்பேட்டைத் தெரு ஆகிய பகுதியில் உள்ள சாலைகளில் சூழ்ந்ததுடன், குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்தது.
மேலும், பேருந்து நிலைய பகுதியில் 3 அடி உயரத்துக்கு மழைநீருடன், கழிவு நீரும் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, கோட்டாட்சியர் சிந்துஜா உள்ளிட்ட அலுவலர்கள் வந்து மழைநீர் சூழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
மணப்பாறை பகுதியில் பெய்த கனமழை காரணமாக அரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஏற்கெனவே பெய்த மழை காரணமாக திருச்சியை அடுத்த புங்கனூர் அருகே அரியாற்றில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மீண்டும் உடைப்புஏற்பட்டது. இதனால் பிராட்டியூர் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ளகாவேரி நகர், முருகன் நகர், வர்மாநகர், தீரன் நகர், புங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், திண்டுக்கல்லில் இருந்துவந்த வாகனங்கள் அனைத்தும் ராம்ஜிநகர் அருகே மணிகண்டம் வழியாக திருச்சிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இதேபோல, உறையூர் பாத்திமா நகரிலும் வெள்ளம் படிப்படியாக உயர்ந்து வருவதால், அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் கவலை அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago