கல்லணையில் வாகன சோதனை நடத்திய - காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்த முயன்றவர் கைது : ஆயுதங்களுடன் 3 பேர் தப்பியோட்டம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் வாகன சோதனை நடத்திய, காவல்உதவி ஆய்வாளரை கத்தியால் குத்த முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை பாலத்தில் நேற்று முன்தினம் இரவு தோகூர் உதவி ஆய்வாளர்கள் அய்யாபிள்ளை, வேல்முருகன் மற்றும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரே மோட்டார்சைக்கிளில் வந்த 4 பேரை போலீஸார் நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் திருச்சி பெல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த தர் மகன் நரேஷ்ராஜீ(28), துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்த ஜான்போஸ்கோ மகன் ரூபன்(21), இந்திரா தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் வினீத்(21), பாண்டியன் மகன் சாந்தகுமார்(21) ஆகியோர் என்பதும், 4 பேரும் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும், 4 பேரும் லால்குடி அருகே உள்ள அரியூர் பகுதிக்குச் சென்று வந்ததாக கூறியுள்ளனர்.

தொடர்ந்து, அவர்களின் செல்போனை வாங்கிய போலீஸார், அதை தோகூர் காவல் நிலைய அறையின் உள்ளே வைத்து பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் உதவி ஆய்வாளர் அய்யாபிள்ளையை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க முயன்றனர். இதைப் பார்த்த மற்ற போலீஸார் உடனடியாக காவல் நிலைய அறையின் கதவை சாத்தியதால், அய்யாபிள்ளை உயிர் தப்பினார்.

இதையடுத்து, வெளியே நின்றிருந்த 4 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். அவர்களை கல்லணை பகுதியில் தோகூர் போலீஸார் தேடி வந்தனர்.

இதற்கிடையே, சிறிது நேரத்துக்குப் பிறகு செக்போஸ்ட் காவல் நிலைய அறையின் முன்பாக விட்டுவிட்டு சென்ற தங்களின் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த நரேஷ்ராஜீயை தோகூர் போலீஸார் பிடித்து கைது செய்தனர். மேலும், மோட்டார் சைக்கிளில் இருந்த ஆடு உரிக்க பயன்படுத்தும் 3 கத்திகளையும் பறிமுதல் செய்தனர். இரும்புக் கம்பி, கத்தி போன்ற ஆயுதங்களுடன் தப்பிச் சென்ற மற்ற 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆடு உரிக்கும் கத்தியுடன் வந்தவர்கள் தோகூர் போலீஸார் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் உதவி ஆய்வாளர் அய்யாபிள்ளையை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க முயன்றனர். இதைப் பார்த்த மற்ற போலீஸார் உடனடியாக காவல் நிலைய அறையின் கதவை சாத்தியதால், அய்யாபிள்ளை உயிர் தப்பினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்