மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் வலியுறுத்தினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் நா.பெரியசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழு தலைவர் அ.பாஸ்கர் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.
அப்போது முதல்வரிடம் அவர்கள் அளித்த மனு:
மழை, வெள்ளத்தால் பயிர்கள்கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் காப்பீட்டுத் திட்டத்தில்விடுபட்டுப் போன ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகை கிடைக்கச் செய்ய வேண்டும். பயிர்கள் அழுகிய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கும் சேதங்களுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும்.
உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். கிராமங்கள்தோறும் சமூக நல்லிணக்க குழுக்களை அமைக்க வேண்டும். அரசு கட்டிக் கொடுத்த வீடுகளில் பழுதடைந்த பழைய வீடுகளையும், குடிசை வீடுகளையும் மாற்றி, புதிதாக கட்டித் தரவேண்டும். நிலமில்லாத, வருமான வரி எல்லைக்குள் வராதகுடும்பங்களில் உள்ள முதியோர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்களை 200 ஆகவும், தினக் கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்த வேண்டும். நிலமில்லாத கிராமத் தொழிலாளர்கள், பழங்குடிகள், மலைவாழ் மக்கள் குடும்பங்களின் குடும்ப அட்டைகள் அனைத்தையும் பிஎச்எச் வகைக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago