டிச.7-ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் : அமைப்பு ரீதியான பதவிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

அதிமுக ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிச.7ம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அமைப்பு ரீதியான பதவிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டம்சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 1-ம் தேதி நடந்தது. அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒரே வாக்கின் மூலமாக இணைந்தே தேர்வு செய்யும் விதமாக சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இதுதவிர, அமைப்பு ரீதியான தேர்தல்கள் தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுக சட்ட விதியின்படி, கட்சி அமைப்புகளின் தேர்தல்5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும் என்பதற்கேற்ப, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் ஆணையர்களாக அமைப்பு செயலாளர் பொன்னையன், தேர்தல்பிரிவு செயலாளர் பொள்ளாச்சிஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிச.8-ல் தேர்தல் முடிவு

இதற்கான வேட்புமனு தாக்கல் டிச.3-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு தொடங்கி 4-ம் தேதி (நாளை) மாலை 3 மணிக்கு நிறைவடைகிறது. மனுக்கள் 5-ம் தேதிகாலை 11.25 மணிக்கு பரிசீலிக்கப்படும். 6-ம் தேதி மாலை 4 மணிவரை மனுவை திரும்ப பெறலாம். டிச.7-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நடத்தி, தேர்தல் முடிவு டிச.8-ம் தேதி அறிவிக்கப்படும்.

அமைப்புத் தேர்தல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு:

கட்சி விதிமுறைப்படி, முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைகழக நிர்வாகிகள், பேரூராட்சி மற்றும் நகர வார்டு கழக நிர்வாகிகள், மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் டிச.13 முதல் 23-ம் தேதி வரை 2 கட்டங்களாக நடைபெறுகின்றன.

முதல் கட்டமாக, டிச.13, 14-ம் தேதிகளில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்சி நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள 35 மாவட்டங்களில் அமைப்பு தேர்தல் நடைபெறும்.

2-வது கட்டமாக, டிச.22, 23-ம்தேதிகளில் தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கோவை, திருப்பூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், கடலூர், ராணிப்பேட்டை, சென்னை மாவட்டங்களில் நிர்வாக ரீதியான 40 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும்.

நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் தேர்தல் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்ய வேண்டும்.

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கிளை கழக செயலாளர் பதவிக்கு ரூ.250 செலுத்தி விண்ணப்பம் பெற்று சமர்ப்பிக்கலாம். அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகளுக்கு கட்டணம் இல்லை.

பேரூராட்சி வார்டு கழக செயலாளர் பதவிக்கு ரூ.300, நகர வார்டு கழக செயலாளர் பதவிக்கு ரூ.500, மாநகராட்சி வட்டக் கழக செயலாளர் பதவிக்கு ரூ.2,000 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதில் அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதி பதவிகளுக்கு பேரூராட்சிக்கு ரூ.200, நகராட்சிக்கு ரூ.300, மாநகராட்சிக்கு ரூ.700 கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்