சித்திரை புத்தாண்டை மாற்றக் கூடாது: : முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பல நூற்றாண்டாக சித்திரை மாதப் பிறப்புதான் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதை சீர்குலைக்க கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பல நூற்றாண்டாக சித்திரை மாதப்பிறப்புதான் தமிழ்ப் புத்தாண்டாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், மக்களின் உணர்வுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், ‘தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு’ என்பதற்கு வழிவகை செய்யும் சட்டம் திமுக ஆட்சியில் 2008-ம் ஆண்டு இயற்றப்பட்டது.

இது மக்கள் மீது திணிக்கப்பட்ட, சாதாரண மனிதனின் உரிமையை பறிக்கும் சட்டம் என்று அப்போதே மக்கள்எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்தான், சட்டம் இயற்றியும்கூட, தமிழக மக்கள் சித்திரை முதல் தேதியையே தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடினர். 2011-ல் ஜெயலலிதா முதல்வரானதும், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழலில், 2022 பொங்கல் பரிசுப் பையின் முகப்பில்‘தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்’ என்றுகுறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து மக்கள் அதிர்ந்துபோயுள்ளனர். பொங்கலை முன்னிட்டு கடந்த முறைபோல அரசுரொக்கமாக ரூ.2,500 வழங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த அறிவிப்பு மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, மக்களின் உணர்ச்சிகள், கருத்துகளுக்கு மதிப்பளித்து, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை தொடர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்