பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் குழந்தைகளின் அடையாளங்களை வெளிப்படுத்து விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களைக் கடைபிடிப்பது அனைத்து ஊடகங்களின் கடமை என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மதுரை சிந்தாமணியைச் சேர்ந்தகிருபா பிரியதர்ஷினி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக 10 லட்சத்துக்கும் அதிகமான பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடுவதும், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் குற்றம் என போக்ஸோ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
எனவே சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான தகவல்களை நீக்கவும், பாலியல் சம்பவங்களில் பெண் குழந்தைகளின் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும், அடையாளங்களை வெளிப்படுத்தும் ஊடகங்கள், சமூக வலைதளங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் காவல் துறையில் தனிப் பிரிவு தொடங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்ய நாராயணா வேல்முருகன் ஆகியோர் கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருந்தது. தற்போது தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக மக்களுக்கு உடனுக்குடன் செய்திகள் சென்றடைய மின்னணு ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் உதவியாக உள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகள் கிடைத்து வருகின்றன.
பல ஊடகங்கள் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்களை மாற்றம் செய்து வெளியிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை ஊடகத் துறையினர் கடைபிடிக்க வேண்டும். இது ஊடகத் துறையின் கடமையாகும். ஆனால் ஊடகத் துறையில் சிலர் வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதில்லை என்றனர்.
பின்னர் இம்மனு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைச் செயலர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago