அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுநடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பின்னர், கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 257 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நிகழ்வாக, அதிமுக தற்காலிக அவைத் தலைவராக, அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலர் அ.தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, கட்சியின்பொன்விழாவை பட்டிதொட்டியெங்கும் கொண்டாடுவது, 75 தொகுதிகளில் வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் பாராட்டுகள், போலி வாக்குறுதிகளால் ஆட்சியைப் பிடித்த திமுகவின் பிரச்சாரத்துக்கு கண்டனம், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற காலஅட்டவணை தெரிவிக்காவிட்டால் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி மற்றும் பருவமழைப் பாதிப்புகளை தடுக்காத அரசுக்கு கண்டனம், மழை நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
11 தீர்மானங்கள்...
மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கடுமையாக உழைப்பது, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுகவை கட்டிக்காத்து, எதிர்கால தேர்தல்களில் வெற்றி பெற உழைப்பது உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சிறப்பு தீர்மானமாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியின் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்படுவதற்குப் பதில், அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கு மூலம் இணைந்தே தேர்வு செய்யப்படுவது தொடர்பாக கட்சியின் சட்ட விதிகளைத்திருத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, மறைந்த முன்னாள் அவைத் தலைவர் இ.மதுசூதனன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மனைவி விஜயலட்சுமி, இணைஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், எம்ஜிஆருக்கு சிறுநீரகம் வழங்கிய லீலாவதி, மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இறந்தவர்கள் உள்ளிட்ட 354 பேர்மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஓபிஎஸ், பழனிசாமி ஆகியோர் ஆகியோர் சில நிமிடங்கள் மட்டும் நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ளனர்.
ராணுவக் கட்டுப்பாடு எங்கே?
ஓபிஎஸ் பேசும்போது, ‘‘மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் நடைபெற்ற பிரச்சினைகள் வெளியில் தெரியும்படியாகிவிட்டது. ராணுவக்கட்டுப்பாடுடன் ஜெயலலிதா நடத்திய கட்சி இப்படியாகிவிட்டது. வாய்ப்பு கொடுத்தால் அனைவரும் கட்டுப்பாடின்றிப் பேசுகின்றனர். வருத்தமாக இருக்கிறது’’ என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.தொடர்ந்து பழனிசாமி பேசும்போது, ‘‘எனக்கும், ஒருங்கிணைப்பாளருக்கும் எந்த சண்டையும் இல்லை. எங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் ஒருங்கிணைப்பாளர்களாகிய நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். அடிப்படைப் பிரச்சினைகளை வெளியில் சொல்லாமல், எங்களிடம் சொன்னால் கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுங்கள்’’ என்றுதெரிவித்ததாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
எம்ஜிஆரின் தீவிர ரசிகர் தமிழ்மகன் உசேன்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன், எம்ஜிஆரின் தீவிர ரசிகர். 1953 முதல் எம்ஜிஆர் மன்றச் செயலராகப் பணியாற்றினார். 1957-ல் நேசமணி தலைமையில் நடைபெற்ற எல்லைப் போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றார்.
திமுவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட நிலையில், அவர் தனிக் கட்சி தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் போட்டு, ரத்தத்தில் கையெழுத்திட்டு எம்ஜிஆரிடம் வழங்கினார். அரசுப் பேருந்து நடத்துநர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, எம்ஜிஆருக்கு ஆதரவாகப் பணியாற்றியவர். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கும்போது கையெழுத்திட்ட 11 பேரில் தமிழ்மகன் உசேனும் ஒருவர். அதிமுகவின் முதல் மாவட்டச் செயலராக கன்னியாகுமரியில் நியமிக்கப்பட்ட இவர், 2010-ல் ஜெயலலிதாவால் அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலராக நியமிக்கப்பட்டார். அதிமுகவின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர், வக்பு வாரியத் தலைவர் பதவிகளிலும் இருந்துள்ளார். அவரது 68 ஆண்டுகால அரசியல் பணிக்காக, இந்த ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதை அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago