அதிமுக செயற்குழு நிறைவேற்றி யுள்ள சிறப்பு தீர்மானத்தில் கூறி யிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் மறைவுக்குப்பின், 2017 செப்.12-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் உருவாக்கப்பட்டன.
பொதுச் செயலருக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து பொறுப்பு,அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாள ருக்கு முழுமையாக கிடைக்க பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.அதிமுக சட்ட விதியை திருத்தம் செய்யவும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, விதிகளில் திருத்தங்கள் செய்யப் பட்டன. தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் கோரிக்கையை ஆய்வுசெய்தும், செயற்குழு உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தும் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, விதி 20(அ)வில்பிரிவு 2-ல் உள்ள ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவர் என்பதை மாற்றி, அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று திருத்தப்பட்டுள்ளது.
விதி 43-ல் விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும் என்பது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல என மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல, விதி 45-ல் அதிமுகசட்டதிட்ட விதிகளில் எதை தளர்த்தவும், விதிவிலக்கு அளிக்கவும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உண்டு என கூறப்பட்டுள்ளது.
இது, சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப் பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதிக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கவோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வரும். இதற்குப்பின் கூட்டப்படும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவது என்றும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, "5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் கட்சி உறுப்பினராக இருப்பவர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாவர்" என்றார்.
அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, "தற்போது நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவர் பெயரும் இருக்கும்.
தனித்தனியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறை இல்லாமல், அடிப்படை உறுப்பினர் ஒருவர் ஒரு வாக்கை அளித்து, இருவரையும் தேர்வு செய்ய வேண்டும். கிளைக்கழகம் அளவில் தேர்தல் நடைபெறும். பெரும்பாலும் முக்கியப்பொறுப்புகளுக்கு போட்டியின்றித்தேர்வு செய்யப்படும் நிகழ்வே நடைமுறையில் உள்ளது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago