குமரி, தென்காசி, கோவையில் இருந்து 20 மாதங்களுக்குப் பிறகு - கேரளாவுக்கு பேருந்து போக்குவரத்து தொடக்கம் :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி, தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு 20 மாதங்களுக்குப் பிறகு அரசுப் பேருந்து போக்குவரத்து நேற்று தொடங்கியது.

கரோனா காரணமாக கடந்த 2020 மார்ச் முதல் கேரள மாநிலத்துக்கான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து பேருந்துபோக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலினை, கேரள முதல்வர்பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார். கேரளாவுக்கு பேருந்துகளை இயக்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி வழங்கினார். இதையடுத்து 20 மாதங்களுக்குப் பிறகு தமிழகம் - கேரளா இடையே பேருந்து போக்குவரத்து நேற்று தொடங்கியது.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், கொல்லம் ஆகிய பகுதிகளுக்கு நேற்று 35 பேருந்துகள் இயக்கப்பட்டன. கேரளாவில் இருந்து நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்காவிளை, கன்னியாகுமரிக்கு 27 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதுபோல், தென்காசியில் இருந்து கொல்லம், புனலூர், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொட்டாரக்கரை, ஆலப்புழா ஆகிய பகுதிகளுக்கு தமிழக அரசுப் பேருந்துகளும், செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி பகுதிகளுக்கு கேரள அரசுப் பேருந்துகளும் தலா 20 வீதம் இயக்கப்பட்டன.

இதேபோன்று, கோவை உக்கடத்தில் இருந்து பாலக்காடு, குருவாயூர், திருச்சூர், தத்தமங்கலம் உள்ளிட்ட இடங்களுக்கு 10 பேருந்துகள், பொள்ளாச்சியில் இருந்து 5 பேருந்துகள் என மொத்தம் 15 பேருந்துகள் முதல் நாளில் இயக்கப்பட்டன. உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பாலக்காட்டுக்கு 12 கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தேனி மாவட்டம் கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு வழியாக இரு மாநில பேருந்துகளும் இயங்கத் தொடங்கின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்