கேரளாவைப் போல விலை நிர்ணயம் - காய்கறிகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கேரளாவைப் போல அரசே தமிழகத்தில் காய்கறிகள், பழங்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் காய்கறிகளின் விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பொதுமக்களிடமிருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட விலைஇடைத்தரகர்களுக்குத்தான் செல்கிறது.

காய்கறிகளுக்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து, அவற்றை கொள்முதல் செய்து மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதை கேரள அரசு சாத்தியமாக்கியிருக்கிறது. விளைபொருட்களை கேரள அரசின் காய்கறிகள் மற்றும் பழங்கள் மேம்பாட்டுக் குழுவும், அரசிடம் பதிவு செய்துகொண்ட தனியார் நிறுவனங்களும் வாங்கி நியாய விலையில் விற்பார்கள். அதனால், உழவர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும், மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கும்.

கேரளாவில் தக்காளி விலை ரூ.56

கேரள அரசின் இந்தத் திட்டம்இப்போது மிகச்சிறப்பாக பயனளித்திருக்கிறது. தமிழகத்தில் ஒரு கிலோதக்காளி ரூ.180 வரை விற்கப்பட்ட நிலையில், கேரளாவில் வெறும் ரூ.56-க்கு விற்கப்பட்டிருக் கிறது. அதில் பெரும்பகுதி விவசாயிகளுக்கு கொள்முதல் விலையாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தோட்டக்கலைத் துறையால் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும். ஒவ்வொரு காய்கறிக்கும் உறுதி செய்யப்பட்ட விலை கிடைப்பதால், அதிகம் விளையும்போது போதிய விலை கிடைக்காமல் காய்கறிகளை குப்பையில் கொட்டும் நிலையும், அறுவடை செய்யாமல் செடிகளிலேயே வாட விடும் நிலையும் மாறும். எனவே, தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தி யுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்