டபுள்யு.எஃப்.எஸ்.ஏ கற்பித்தல் குழுவின் தெற்கு ஆசிய பிரதிநிதியாக - கோவை மயக்கவியல் நிபுணர் டாக்டர் பாலவெங்கட் தேர்வு :

By செய்திப்பிரிவு

இந்திய மயக்கவியல் சங்கத்தின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், கோவை கங்கா மருத்துவமனையின் மயக்கவியல் பிரிவுநிபுணருமான டாக்டர் பால வெங்கட் ‘வேர்ல்டு பெடரேஷன் ஆஃப் சொசைட்டி ஆஃப் அனஸ்தீசியா' (டபுள்யு.எஃப்.எஸ்.ஏ) இணையவழி கற்பித்தல்குழுவின் தெற்கு ஆசிய பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டுஉள்ளார்.

இதுதொடர்பாக டாக்டர் பாலவெங்கட் கூறியதாவது: ஒவ்வொரு நாட்டிலும் மயக்கவியல் நிபுணர்கள் அடங்கிய தேசிய சங்கம் செயல்பட்டு வருகிறது. அந்த தேசிய சங்கங்களின் தலைமையகம் (டபுள்யு.எஃப்.எஸ்.ஏ) லண்டனில் உள்ளது. 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சங்கங்கள் இந்த தலைமையகத்தின்கீழ் வருகின்றன. அங்கிருந்துதான் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. டபுள்யு.எஃப்.எஸ்.ஏ-ன்கீழ் பல்வேறு பணிகளுக்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வரும் 2024 வரையிலான கற்பித்தல் குழுவின் தெற்கு ஆசியப் பிரதிநிதியாக என்னைத் தேர்வு செய்துள்ளனர்.

கரோனா காலத்தில் உலகம் முழுவதும் மயக்கவியல் துறைச்சார்ந்து நேரடி கருத்தரங்குகள் நடைபெறுவது நின்றுபோனது. மேலும்,கரோனா நோயாளிகளை முதுநிலை மருத்துவ மாணவர்கள் அதிகம் கவனிக்க வேண்டி இருந்ததாலும், அறுவை சிகிச்சைகள்குறைந்துவிட்டதாலும், மாணவர்களுக்கு சிகிச்சை அனுபவம் கிடைப்பது குறைந்துவிட்டது. அவர்கள் படிப்பு முடிந்து வெளியே வரும்போது, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அனுபவம் குறைவாக இருக்கும். அந்த இடத்தில் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

எனவே, டபுள்யு.எஃப்.எஸ்.ஏசார்பில் மயக்கவியல் துறை நிபுணர்களைக் கொண்டு ஆன்லைன் மூலம் கற்பிக்கவும், துறையில் நடைபெறும் நடப்பு நிகழ்வுகளை அனைவரும் தெரிந்துகொள்ளவும், சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் பெறவும் இணையவழி கற்பித்தலுக்கு என தனி போர்டெல் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாட்டுக்கும் மருத்துவத் தேவைகள் வித்தியாசமாக இருக்கும். எனவே, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என ஒவ்வொருகண்டத்தில் இருந்தும் கற்பித்தலுக்கு என ஒரு பிரதிநிதியைத் தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்