கடலூர் மாவட்டத்தில் கனமழையால் கடும் பாதிப்பு - 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் வெள்ளம் :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. 10 ஆயிரம்குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து, அம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாதிப்பு அதிகமாக உள்ள சூழலில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்றும் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் இம்மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களைச் சுற்றி வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.

இந்தத் தொடர் கனமழையால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரத்து 500 ஏக்கர் நெற் பயிர்கள், 2 ஆயிரத்து 200 ஏக்கர் உளுந்து, 500 ஏக்கர் மக்காசோளம், 1,800 ஏக்கர் பருத்தி மற்றும் தோட்டப் பயிர்களான மரவள்ளி, பூக்கள் ஆகியவை 5 ஆயிரம் ஏக்கர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் தென் பெண்ணையாற்று கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட நகர் பகுதிகள் மற்றும் பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், காரைக்காடு, திருவந்திபுரம், அன்னவள்ளி, சேடப்பாளையம். குண்டு உப்பளவாடி, ராமாபுரம், கோண்டூர், கடலூர், முதுநகர், செம்மண்டலம், பச்சையாங்குப்பம், நத்தப்பட்டு, புதுப்பாளையம் கம்மியம்பேட்டை, குமளங்குளம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வடியவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. திருவந்திபுரத்தில் 420 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்